இந்தோனீசியாவின் தெற்கு சுமத்ராவில் உள்ள தங்கள் நிலங்களில் காடுகளுக்குத் தீவைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மூன்று நிறுவனங்களுக்கு, சிங்கப்பூரின் தேசியச் சுற்றுப்புற அமைப்பு சட்டபூர்வ அறிவிப்புகளை அனுப்பியுள்ளது.
பூமி மெகார் ஹிஜாவ், பூமி அண்டலாஸ் பெர்மாய், செபாங்குன் பூமி அண்டலாஸ் உட் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய அந்த மூன்று மரநார் நிறுவனங்களும் ஆசியா பல்ப் அண்ட் பேப்பர் (APP) நிறுவனத்திற்கு மரநார் விநியோகம் செய்துவருகின்றன.
வட்டாரத்தில் நிலவும் புகைமூட்டத்திற்குக் காரணமான இந்த நில உரிமையாளர்களின் செயல்களால், ஏபிபி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பசுமைச் சான்றிதழுக்குச் (Green Label) சிங்கப்பூர் சுற்றுப்புற மன்றம் (SEC) தற்காலிகக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்கீழ், ஏபிபி நிறுவனம் தனது நிலப்பகுதிகளில் தீத்தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதுடன், அன்றாட அறிக்கைகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தக் கூடுதல் கண்காணிப்பு அறிக்கைகள் திருப்திகரமாக இல்லையெனில், ஏபிபி நிறுவனத்தின் ‘எஸ்ஜிஎல்எஸ்+’ சான்றிதழ் இடைநிறுத்தப்படும். அவ்வாறு நிறுத்தப்பட்டால், சான்றளிக்கப்பட்ட ஏபிபி தயாரிப்புகளில் அந்த முத்திரையைப் பயன்படுத்த முடியாது.
வட்டாரத்தில் நிலவும் புகைமூட்டத்தைத் தணிக்கும் நோக்கில், காட்டுத்தீயை அணைக்கவும் தீ வைப்பதை உடனடியாக நிறுத்தவும் வலியுறுத்தி மொத்தம் 10 இந்தோனீசிய நிறுவனங்களுக்கு தேசியச் சுற்றுப்புற அமைப்பு சட்டபூர்வ அறிவிப்புகளை வழங்கியுள்ளது. அவற்றில் நான்கு நிறுவனங்கள் ஏபிபி நிறுவனத்திற்குப் பொருள் விநியோகிப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏபிபி நிறுவனம் ஏற்கெனவே 2015ஆம் ஆண்டு நிலவிய கடுமையான புகைமூட்டத்தின்போதும் விசாரணையை எதிர்கொண்டது. அப்போது அந்நிறுவனத்தின் பசுமைச் சான்றிதழ் இடைநிறுத்தப்பட்டு, அதன் தயாரிப்புகள் சிங்கப்பூர் அங்காடிகளிலிருந்து அகற்றப்பட்டன.
பின்னர், 2019 மே மாதத்தில் ஏபிபி நிறுவனம் மீண்டும் மேம்படுத்தப்பட்ட ‘எஸ்ஜிஎல்எஸ்+’ சான்றிதழைப் பெற்றது. சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்துப் பயனீட்டாளர்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்தச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதாக மன்றம் தெரிவித்துள்ளது.
