பானக்கலன்களைத் திரும்பக் கொடுத்துப் பத்துக் காசு பெறும் திட்டம்; சில கடைகள் கட்டணம் விதிக்கமாட்டா

பானக்கலன்களைத் திரும்பக் கொடுத்துப் பத்துக் காசு பெறும் திட்டம்; சில கடைகள் கட்டணம் விதிக்கமாட்டா

2 mins read
e56b143d-a9cd-4aec-b743-89b8e6fb2181
பானக்கலன்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளத் திட்டமிடும் கடைகள், ‘ரிட்டர்ன் ரைட் எஃப்&பி அவுட்லட்ஸ்’ என்று அழைக்கப்படுகின்றன. - படம்: சாவ்பாவ்

வரும் ஏப்ரல் 1ஆம் தேதிமுதல், பானக்கலன்களை வாங்கும்போது, உணவருந்தும் சேவைகளை வழங்கும் சில உணவங்காடிகளும் உணவு, பானக் கடைகளும் வாடிக்கையாளர்களுக்கு 10 காசு வைப்புத்தொகையை விதிக்கமாட்டா.

அருந்தியபின் பானக்கலன்களைத் திரும்பக் கொடுக்கும் திட்டம் (BCRS) ஏப்ரல் 1ஆம் தேதி நடப்புக்கு வரும்.

உணவங்காடி நிலையங்கள், காப்பிக் கடைகள் ஆகியவற்றில் உள்ள கடைகள் போன்றவற்றுக்கு, இட அமைப்பால் அத்தகைய போத்தல்களைச் சேகரிப்பது சவாலாக அமையலாம். ஒரே பகுதியில் பல பானக் கடைகள் இருக்கக்கூடும்.

அத்தகைய சூழல்களில், 10 காசு வைப்புத்தொகை சேர்க்கப்பட்டு பானங்கள் விற்கப்படும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது தெரிவித்தார்.

தேசிய சுற்றுப்புற வாரியம் நிர்வகிக்கும் அந்தத் திட்டத்தின்கீழ், வாடிக்கையாளர்கள் 150 மில்லிலிட்டர் முதல் 3 லிட்டர் வரையிலான பானக்கலன்களுக்கும் 10 காசு கூடுதலாகச் செலுத்துவார்கள்.

அவற்றை அருந்திய பின்னர் காலியான பானக்கலன்களையும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் திரும்பக் கொடுக்கும்போது, அவர்களிடம் வைப்புத்தொகை திரும்பக் கொடுக்கப்படும்.

இருப்பினும், ஒவ்வொரு பானக்கலனுக்கும் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகக் கட்டணம் விதிக்கும் பேரங்காடிகளுக்கும் மற்ற சில்லறைக் கடைகளுக்கும் சிறப்பு ஏற்பாடு தேவைப்படுவதாக டாக்டர் ஜனில் கூறினார். அவற்றுக்கான செயல்பாட்டு மாதிரிகள் வேறுபடுவதே அதற்குக் காரணம் என்றார் அவர்.

பானக்கலன்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளத் திட்டமிடும் கடைகள், ‘ரிட்டர்ன் ரைட் எஃப்&பி அவுட்லட்ஸ்’ (Return Right F&B outlets) என்று அழைக்கப்படுகின்றன.

அத்தகைய கடைகளின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும், வாடிக்கையாளர்கள் எளிதில் அடையாளம் காண, அந்தத் திட்டத்தில் பங்கெடுக்கும் கடைகளில் அடையாளக் குறியீடுகளும் ஒட்டுவில்லைகளும் ஒட்டப்பட்டிருக்கும் என்று டாக்டர் ஜனில் கூறினார்.

குறிப்புச் சொற்கள்