பத்து விழுக்காட்டுச் சிங்கப்பூரர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை என்று ஓர் ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன.
தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இருந்தபோதிலும் நேரிடையாகச் சந்தித்த நண்பர்களையே அவர்கள் கொண்டிருப்பதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.
பொதுக்கொள்கை ஆய்வுக் கழகம் அந்த ஆய்வை நடத்தியிருக்கிறது.
வயது, பாலினம், இனம் போன்ற வேறுபாடுகளைக் கடந்து மாறுபட்ட நண்பர்களைக் கொண்டிருப்பதாக ஆய்வில் கலந்து கொண்டவர்கள் கூறியுள்ளனர். இது, அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தைப் பிரதிபலிக்கிறது.
‘மின்னிலக்க உலகில் சமூகக் கட்டமைப்பு, சகோதரத்துவம்’ என்ற அந்த ஆய்வில் சிங்கப்பூரர்களில் சிலர் நட்புக்காகச் செயற்கை நுண்ணறிவை நாடுவதும் தெரிய வந்துள்ளது. ஆனால் நெருக்கமான நட்புக்கு மனிதர்களுக்கு மாற்றாகச் செயற்கை நுண்ணறிவு அமையா என்று ஆய்வில் பதிலளித்தவர்கள் கூறினர்.
மொத்தம் 3,713 சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகளிடையே ஆய்வு நடத்தப்பட்டது. 2025ஆம் ஆண்டில் அவர்களுடைய வயது 21க்கு மேல் இருந்தது.
பொதுக் கொள்கை ஆய்வுக் கழகத்தின் சமூகப் பிரிவின் தலைவரான மேத்யூ மேத்யூஸ் ஆய்வின் முடிவுகளை வெளியிட்டார். செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20) அன்று ஆய்வாளர்களிடையே இணையம் வழியாக நடந்த கலந்துரையாடலின்போது ஆய்வின் முடிவுகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
சிங்கப்பூரர்களில் 89.5 விழுக்காட்டினர், குறைந்தது ஒரு நெருங்கிய நண்பரைக் கொண்டுள்ளனர். தனிப்பட்ட விவகாரங்களைப் பேசவும் அவசர உதவிக்கு அழைக்கவும் இந்த நட்பு உதவுவதாக ஆய்வில் பங்கேற்றவர்கள் கூறியுள்ளனர். ஆய்வில் கலந்துகொண்டவர்கள் குடும்ப உறுப்பினர்களையும் காதலர்களையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
இணையம்வழி குறைந்தது ஒரு நண்பரை 23.2 விழுக்காட்டினர் கொண்டுள்ளனர். இது, இணையம்வழி ஏற்பட்ட முதல் நட்பு மட்டுமல்லாமல் இணையம் வழியாகவே அந்த நட்பு நீடிப்பதாகவும் சொல்கின்றனர்.
பதிலளித்தவர்களில் பத்தில் ஒன்பதுக்கும் மேற்பட்டோர் தங்களுடைய நெருங்கிய நண்பர்களையெல்லாம் பள்ளி, வேலையிடங்கள் போன்ற இடங்களில் தொடக்கமாகச் சந்தித்துள்ளனர்.
இளம் வயதினரும் உயர் சமூகப் பொருளியல் தகுதி கொண்டவர்களும் அதிக நெருங்கிய நண்பர்களை வைத்திருப்பதற்கு வாய்ப்புள்ளது. நெருங்கிய நண்பர்கள் இல்லை என்று கூறுபவர்கள் வயதானவர்களாகவும் குறைந்த பொருளியல் தகுதி உடையவர்களாவும் இருக்கின்றனர்.
இளம் வயதினர், அதிகக் கல்வி கற்றவர்களில் அதிகமானோர் இணையம் வழி சந்தித்த நண்பர்களைக் கொண்டுள்ளனர். அவர்களில் 21 முதல் 35 வயது உள்ளவர்களில் 43.5 விழுக்காட்டினர் தங்களுக்கு இணையத்தில் அறிமுகமான நண்பர்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர்.
இது, 51 வயது மேற்பட்டவர்களிடையே 20 விழுக்காடாக உள்ளது. ஆய்வில் பதிலளித்த பட்டதாரிகளில் 35.8 விழுக்காட்டினருக்கும் இணையம்வழி சந்தித்த நண்பர்கள் உள்ளனர். அதே சமயத்தில் உயர்நிலைப் பள்ளிக் கல்வி அதற்கும் குறைவான கல்வித் தகுதி கொண்டர்களில் 23 விழுக்காட்டினர் மட்டுமே இணையத்தில் சந்தித்த நண்பர்களைக் கொண்டுள்ளனர்.
இணையத்தில் நண்பர்களைச் சந்தித்தவர்களில் ஏறக்குறைய பாதிப் பேர் குறைந்தபட்சம் சமூக ஊடகத்தில் நண்பர்களைச் சந்தித்துள்ளனர். பத்தில் நால்வருக்கு குறுந்தகவல் அல்லது செயலி மூலம் அந்த நட்பு ஏற்பட்டுள்ளது.

