பத்து ஆண்டுகளாக ஈசூன் குப்பைச் சேகரிப்பாளரின் வீட்டைச் சுத்தம் செய்தும் பலனில்லை

பத்து ஆண்டுகளாக ஈசூன் குப்பைச் சேகரிப்பாளரின் வீட்டைச் சுத்தம் செய்தும் பலனில்லை

2 mins read
d0bb5dc2-dac3-492b-846e-424734875f58
குப்பைகளுக்கு மத்தியில் 20க்கும் மேற்பட்ட குடைகள், கைவிடப்பட்ட குழந்தைத் தள்ளுவண்டிகள், பழைய வீட்டு உபகரணங்கள் முதலியவை காணப்பட்டன. - படங்கள்: ஷின் மின்

ஈசூனில் உள்ள ஒரு வீடு மிகவும் அலங்கோலமாகக் கிடந்ததால், அதன் பொருள்கள் அந்த வீட்டுக்கு வெளியே இருந்த தாழ்வாரம்வரை சிதறிக்கிடந்தன.

ஒரு ரகசியத் தகவலின் பேரில், ஷின் மின் நாளிதழின் நிருபர் ஒருவர் அந்த வீட்டுக்குச் சென்றபோது, ​​வெளியே இருந்த பகுதி, பெட்டிகளாலும் இதர பொருள்களாலும் நிறைந்திருப்பதைக் கண்டார்.

குப்பைகளுக்கு மத்தியில் 20க்கும் மேற்பட்ட குடைகள், கைவிடப்பட்ட குழந்தைத் தள்ளுவண்டிகள், பழைய வீட்டு உபகரணங்கள் முதலியவை காணப்பட்டன.

ஒரு வயதான தம்பதியினரும் அவர்களது மகளும் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக அந்த வீட்டில் வசித்து வருவதாகவும் அவர்களின் மகன் பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் அண்டை வீட்டுக்காரரான லின் கூறினார்.

மேலும், கடந்த சில ஆண்டுகளில், பல தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், நகர மன்ற உறுப்பினர்கள் அந்த வீட்டைப் பத்து முறைக்கு மேல் சுத்தம் செய்துள்ளதாகவும் லின் கூறினார்.

“ஆனால், அது எப்போதும் ஒரு மாதத்திற்குள் அதன் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுகிறது. பொருள்களைத் தூக்கி எறிவது குறித்து அந்தத் தம்பதியினர் வாக்குவாதம் செய்தனர். ஆண் அவற்றை அப்புறப்படுத்த விரும்பியபோதும் பெண் மறுத்துவிட்டார்,” என்று லின் மேலும் கூறினார்.

இருப்பினும், ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் இருவரும் தங்கள் உடைமைகளை நடைபாதையில் குவித்து வைத்திருந்ததாகவும் அண்டை வீட்டுக்காரர்கள் அவர்களிடம் பேசிய பிறகு பொருள்களை அப்புறப்படுத்த ஒப்புக்கொண்டதாகக் கூறியதாகவும் மற்றோர் அண்டை வீட்டுக்காரர் கூறினார்.

அப்படியிருந்தும், சுற்றியுள்ள பகுதியில் இன்னும் பொருள்கள் சிதறிக் கிடந்தன.

ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் அந்த அசுத்தத்தைச் சுத்தம் செய்ய வேண்டும். இல்லையெனில், பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நகர மன்றம், வீட்டு உரிமையாளர்களுக்கு அனுப்பிய குறிப்பு ஒன்றின் மூலம் தெரிவித்தது.

ஷின் மின் நாளிதழின்படி, வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) மற்றும் பிற அமைப்புகளின் அதிகாரிகள், அந்த வீட்டில் உள்ள தேவையற்ற பொருள்கள் தொடர்பிலான பிரச்சினையைக் கண்காணித்து வருவதாகவும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நகர மன்றம் கூறியுள்ளது.

தேவையற்ற பொருள்களை அகற்றுவதற்கான விதிகளை அமல்படுத்துவதோடு, பொது இடங்களின் பாதுகாப்பையும் மக்கள் நடமாட்டத்தையும் உறுதிசெய்யும் வகையில், தனிப்பட்ட சம்பவங்களை மிகவும் கனிவான முறையில் கையாள்வதாகவும் நகரமன்றம் மேலும் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
குப்பைநகர மன்றம்பயன்படுத்திய பொருள்கள்