தெம்பனிசில் 27 புதிய பேருந்துகளை இயக்க ஒப்பந்தப்புள்ளிக்கு அழைப்பு

2 mins read
fe3bc6e7-8b7d-44f5-903b-5b17b8a27ad7
டிசம்பர் 19 புதிய பேருந்து ஒப்பந்தத்துக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் ஒப்பந்தப்புள்ளி கோரியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தெம்பனிசில் 2026ஆம் ஆண்டு முதல் பொதுமக்களுக்காக 27 பேருந்துகளை இயக்க பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் தங்களது ஒப்பந்தப்புள்ளியை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மின்சாரப் பேருந்துகளை இயக்குவது ஒரு முக்கிய மதிப்பீடாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கென நிலப் போக்குவரத்து ஆணையம் டிசம்பர் 19ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரியது என்றும் 2025ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அதற்கான ஒப்பந்தம் வழங்கப்படலாம் என தான் எதிர்பார்ப்பதாகவும் ஆணையம் கூறுகிறது.

தற்போதைய நிலையில் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் தெம்பனிஸ் பேருந்து சேவைத் தொகுப்பை 2016ஆம் ஆண்டு முதல் வழங்கி வருவது இங்கு நினைவுகூரத்தக்கது.

இதன் தொடர்பில், எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் தற்போதைய ஒப்பந்தம் 2026ஆம் ஜூலை மாதத்துடன் முடிவுறுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேருந்து சேவைத் தொகுப்பு பெரும்பாலும் பேருந்து சேவை 10, 23, 81 ஆகியவை மேற்கொள்ளும் முக்கிய வழித்தடங்களாகும் என்று கூறப்படுகிறது. அத்துடன், $900 மில்லியன் பெறுமானமுள்ள பேருந்து தொடர்பு மேம்பாட்டுத் திட்டத்தின்படி, 2025ஆம் ஆண்டு அறிமுகம் காணவுள்ள புதிய பேருந்து சேவையும் இதில் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

புதிய பேருந்து சேவை பற்றிய மேல் விவரங்கள் கிடைக்கப் பெறும்போது அவை தெரிவிக்கப்படும் என்று ஆணையம் விளக்கியது.

தெம்பனிஸ் பேருந்து சேவைகள் தற்பொழுது பிடோக் நார்த் பணிமனையில் இருந்து இயங்குகின்றன. அவை 2026ஆம் ஆண்டு புதிதாகத் திறக்கப்படும் ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைந்த பணிமனையின் உதவியுடன் செயல்படும் என்றும் ஆணையம் கூறியது.

சாங்கியில் அமையவிருக்கும் இந்தப் பணிமனையில் 500க்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கு இடமிருக்கும். அத்துடன், அது 200 மின்சாரப் பேருந்துகளுக்கு மின்னூட்டம் செய்யும் வசதியைப் பெற்றிருக்கும். இவற்றுடன், அங்கு மூன்று ரயில் தடங்களுக்கான ரயில்கள் பணிமனையாகவும் அது செயல்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்