கட்டங்கட்டமாக நிரம்பும் தெங்கா குடியிருப்புப் பேட்டை

2 mins read
d90c82b7-8b46-4dd0-8401-ffbf533b6128
தெங்கா வட்டாரத்தில் 12,000க்கும் அதிகமான சாவிகளைக் குடியிருப்பாளர்கள் பெற்றுக்கொண்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் முதல் புத்தம்புது பேட்டையான தெங்காவில் 14 திட்டங்களின்கீழ் 14,000க்கும் அதிகமான வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. அதில் 12,000க்கும் அதிகமான வீடுகளின் சாவிகளைக் குடியேறிகள் பெற்றுவிட்டதாகக் கழகம் சுட்டியது.

முன்னாள் ராணுவத் தளமான தெங்கா முழுமையடைய எப்படியும் 20 ஆண்டுகள் ஆகும் என்ற கழகம், முழுமையடைந்த பின் அங்கு 42,000க்கும் அதிகமான வீடுகள் இருக்கும் என்றது.

20க்கும் அதிகமான ஆண்டுகளுக்குமுன் கட்டப்பட்ட பொங்கோலுக்குப் பிறகு தெங்கா பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய பேட்டை முழுமையடைய காலமாகும் என்பதை அறிந்திருப்பதாகக் கூறிய குடியிருப்பாளர்கள், தொடக்கக் கட்ட சிக்கல்களைப் பொறுத்துக்கொள்வதாகத் தெரிவித்தனர்.

சிங்கப்பூரின் பிற பகுதிகளுடன் இணைக்கும் பொதுப் போக்குவரத்தில் மக்கள் அதிகம் கவனம் செலுத்துகின்றனர்.

தெங்காவில் உள்ள பார்க் ரெசிடென்சஸ் பகுதியில் வசிப்போர் பேருந்து நிலையத்திற்கு நடந்துசெல்ல 10 நிமிடங்கள் ஆவதாகச் சொன்ன குடியிருப்பாளர்கள், அங்கிருந்து டவுன்டௌன் ரயில் பாதைக்குச் செல்ல கால் மணி நேரமாவதாகக் கூறினர்.

தெங்காவில் மக்கள்தொகை அதிகரிப்பதால் புதிய பேருந்துச் சேவைகள் அங்குச் சேர்க்கப்பட்டுள்ளன.

அண்மையில் அங்கு அறிமுகம் செய்யப்பட்ட பேருந்துச் சேவை எண் 452 பயண நேரத்தை 20 நிமிடங்களாகக் குறைத்துள்ளது என்று சிலர் குறிப்பிட்டனர்.

தற்போதைக்குத் தெங்கா பேருந்து முனையத்தில் குறைந்தது ஆறு பேருந்துச் சேவைகள் செயல்படுகின்றன. அங்குள்ள பேருந்துச் சேவைகள் மூலம் புக்கிட் பாத்தோக், பியூட்டி வார்ல்ட், ஜூரோங் ஈஸ்ட் ஆகியவற்றுக்குக் குடியிருப்பாளர்களால் செல்ல முடியும்.

2023ஆம் ஆண்டு வீட்டுச் சாவிகளைப் பெற்றுக்கொண்ட முதல் தொகுதி தெங்கா குடியிருப்பாளர்கள் வட்டாரத்தின் மத்தியக் குளிர்சாதனக் கட்டமைப்பு குறித்து அக்கறை எழுப்பினர்.

சிங்கப்பூரில் மத்திய குளிர்சாதனக் கட்டமைப்பைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பைக் குடியிருப்பாளர்களுக்கு வழங்கிய முதல் பேட்டை தெங்கா.

ஆனால் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாகக் குடியிருப்பாளர்கள் சிலர் அந்தக் குளிர்சாதனக் கட்டமைப்பை ரத்து செய்துவிட்டனர்.

தெங்காவில் குடியிருப்பாளர்கள் எண்ணிக்கை கட்டங்கட்டமாக நிரம்புவதால் வர்த்தகமும் அங்கு மெதுவாக சூடுபிடிக்கிறது.

ஒருசில வர்த்தகர்கள் நிலைமை ஏற்ற இறக்கமாக இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்