தெங்கா, புக்கிட் பாஞ்சாங் ஆகிய பேட்டைகளில் இவ்வாண்டும் 2027ஆம் ஆண்டும் இரண்டு புதிய குடும்பச் சேவை நிலையங்கள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய நிலையங்கள் திறக்கப்பட்டால் சமூக அடிப்படையிலான நிலையங்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 51க்கு உயரும்.
தெங்காவிலும் புக்கிட் பாஞ்சாங்கிலும் குடும்பச் சேவை நிலையங்களுக்கான தேவையைப் பூர்த்திசெய்ய புதிய நிலையங்கள் அமைக்கப்படுவதாகச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தெரிவித்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் நிலவரப்படி சிங்கப்பூரில் மொத்தம் 49 குடும்பச் சேவை நிலையங்கள் உள்ளன. அந்த நிலையங்கள் சமூக ரீதியான உதவிகளையும் மனநல ஆதரவையும் குடும்பங்களுக்கும் தனிநபர்களுக்கும் வழங்குகின்றன.
தெங்காவில் அமைக்கப்படும் முதல் குடும்பச் சேவை நிலையத்தைச் சமூகச் சேவை அமைப்பான ‘தாய் ஹுவா குவான்’ (Thye Hua Kwan) அறநிறுவனம் நிர்வகிக்கும். இவ்வாண்டின் கடைசிக் காலாண்டில் புதிய நிலையம் செயல்படத் தொடங்கும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு சொன்னது.
‘தாய் ஹுவா குவான்’ அறநிறுவனம் பிடோக் நார்த், மெக்பர்சன், தஞ்சோங் பகார், புக்கிட் பாஞ்சாங், ஜூரோங் ஆகியவற்றில் செயல்படும் ஐந்து குடும்பச் சேவை நிலையங்களைக் கவனிக்கிறது.
தெங்காவில் அமைக்கப்படும் புதிய நிலையத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சேவை வழங்குவதற்கான நடைமுறைகள் ஆராயப்படுகின்றன.
புக்கிட் பாஞ்சாங்கில் அமையவிருக்கும் குடும்பச் சேவை நிலையத்தை ‘ஃபெய் யீ’ (Fei Yue) சமூகச் சேவைகள் அமைப்பு நிர்வகிக்கும். அடுத்த ஆண்டுக்குள் நிலையம் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
‘ஃபெய் யீ’ அமைப்பு, புக்கிட் பாத்தோக், சுவா சூ காங், உட்லண்ட்ஸ், தாமான் ஜூரோங், யூ டீ ஆகியவற்றில் ஆறு நிலையங்களை நடத்துகிறது.
பிள்ளை வளர்ப்பு, பராமரிப்பு, குடும்ப உறவுகள், குடும்ப வன்முறை, மனநலப் பாதிப்பு, நிதிப் பிரச்சினை போன்ற பல்வேறு காரணங்களுக்காகக் குடும்பச் சேவை நிலையத்தை மக்கள் நாடுவதாக அமைச்சு சுட்டியது.
2024 நிதியாண்டில் சிங்கப்பூரில் உள்ள குடும்பச் சேவை நிலையங்கள் 26,600 குடும்பப் பிரச்சினைகளைக் கையாண்டதுடன் குடும்பப் பிரச்சினைகள் குறித்து 27,400 தகவல்களைப் பெற்றன.
2023 நிதியாண்டில் 28,200 குடும்பப் பிரச்சினைகளையும் 28,200 தகவல்களையும் நிலையங்கள் கையாண்டன.

