தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெங்கா துடிப்புமிக்க பேட்டையாக உருமாறும்: பிரதமர் வோங்

2 mins read
90dc41f4-6b63-425b-8998-925556a7effb
தெங்காவின் புதிய சமூக மன்றத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: சாவ்பாவ்

புதிய தெங்கா பேட்டை வளர்ந்துவருவதாகவும் அடுத்த சில ஆண்டுகளில் துடிப்புமிக்க வட்டாரமாக மாறும் என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

தெங்கா குடியிருப்பாளர்கள் தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் சிறந்த குடியிருப்பை உருவாக்கிக்கொள்ள அடித்தள அமைப்புகளுடனும் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படும்படி பிரதமர் வோங் கேட்டுக்கொண்டார்.

தெங்கா சமூக மன்றத்தின் (மார்ச் 22) அதிகாரபூர்வ திறப்பு நிகழ்ச்சியில் பேசிய திரு வோங், தெங்கா வட்டாரம் ஆளரவமின்றி முன்பிருந்த பொங்கோல் வட்டாரம் போல இருப்பதாகக் குடியிருப்பாளர் ஒருவர் தம்மிடம் கூறியதாகக் குறிப்பிட்டார்.

“பத்தாண்டுக்கு முன் இருந்த பொங்கோல் வட்டாரம் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் பகுதியாக வர்ணிக்கப்பட்டது. யாருக்கும் அங்குச் செல்ல அதிகம் விருப்பமில்லை. ஆனால், இன்றோ அது அழகான, துடிப்புமிக்க, பல நடவடிக்கைகள் இடம்பெறும் வட்டாரமாக மாறியிருக்கிறது,” என்றார் திரு வோங்.

அதேபோல தெங்கா இன்று வளரத் தொடங்கிவிட்டது என்ற பிரதமர் வோங், அடுத்த சில ஆண்டுகளில் பொங்கோலைப் போல இல்லாவிட்டாலும் பொங்கோலைவிட இன்னும் சிறந்த நிலையில் இருக்கும் என்றார்.

தெங்கா வட்டாரவாசிகள் அடித்தள அமைப்புகளுடன் தொண்டூழியர்களுடன் இணைந்து பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு சமூகப் பிணைப்பை வலுப்படுத்தும்படி திரு வோங் அறிவுறுத்தினார்.

“அப்படி செய்யும்போது தெங்கா என் அடையாளம் என்ற உணர்வு ஏற்படும். தெங்கா குடியிருப்பாளர்களாக முன்னேற முடியும்,” என்று பிரதமர் வோங் சுட்டினார்.

தெங்கா வட்டாரத்தைக் கவனித்துக்கொள்ளும் ஹொங் கா நார்த் நாடாளுமன்ற உறுப்பினர் ஏமி கோரும் தெங்கா சமூக மன்ற திறப்பு விழாவுக்கு வந்திருந்தார்.

மக்கள் செயல் கட்சியின் புதுமுகமான தொழில்முனைவர் சுவா வெய் ‌‌‌‌‌ஷானும் நிகழ்ச்சியில் காணப்பட்டார்.

இதற்கிடையே, டாக்டர் ஏமி கோர் தெங்காவுக்கான பேருந்து போன்ற போக்குவரத்து இணைப்புச் சேவைகளை அதிகரிப்பது பற்றி நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் பேசிவருவதாகச் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்