தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓய்வுபெறும் 20 மசெக எம்.பி.க்களில் டியோ சீ ஹியன், ஹெங் சுவீ கியட்

2 mins read
43daf14e-97b4-48b1-8a23-683d553a3032
வேட்புமனுத் தாக்கல் தினமான புதன்கிழமை (ஏப்ரல் 23) மசெக ஆதரவாளர்களுடன் உரையாடும் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் உட்பட மக்கள் செயல் கட்சியை (மசெக) சேர்ந்த 20 எம்.பி.க்கள் இவ்வாண்டின் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள்.

அரசியலிலிருந்து ஓய்வுபெறும் மற்றவர்களில் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னும் பிரதமர் அலுவலக அமைச்சர் மாலிக்கி ஓஸ்மானும் அடங்குவர்.

போக்குவரத்து, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோரும் தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவும் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள்.

நான்கு முறை எம்.பி.க்களான லிம் வீ கியாக்கும் லிம் பியாவ் சுவானும் மும்முறை எம்.பி.க்களான சீத்தோ யி பின்னும் ஃபூ மீ ஹாரும் ஓய்வுபெறுகின்றனர். வேட்புமனுத் தாக்கல் தின முடிவில் ஒருமுறை எம்.பி.க்களான ஐவரும் வேட்பாளர்களாக உறுதிப்படுத்தப்படவில்லை.

பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதிக்கு தலைமை தாங்கிய மூத்த அமைச்சர் டியோ, புதிதாக அமைக்கப்பட்ட பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதியில் தாம் நிற்கப்போவதில்லை என முன்னதாகக் கூறியிருந்தார். ஆனால், அரசியலிலிருந்து ஓய்வுபெறப்போவதாக அவர் சொல்லவில்லை.

இந்நிலையில், தேர்தலில் தாம் போட்டியிடப்போவதில்லை என வேட்புமனுத் தாக்கல் நிலையமான யூசோஃப் இஷாக் உயர்நிலைப்பள்ளியில் திரு டியோ புதன்கிழமை (ஏப்ரல் 23) தெரிவித்தார். அடுத்து என்ன செய்வது என்பது குறித்து தாம் இன்னும் யோசிக்கவில்லை என்றார் அவர்.

“கொந்தளிப்பான தருணங்களைக் கடந்து நம்மை எதிர்காலத்துக்கு இட்டுச்செல்ல உதவ பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு ஆக வலுவான அணியை வழங்குவதே இப்போதைய முன்னுரிமை,” என்று திரு டியோ சொன்னார்.

இதற்கிடையே, வேட்புமனுத் தாக்கல் தினத்தை முன்னிட்டு துணைப் பிரதமர் ஹெங் எங்கு களமிறக்கப்படுவார் என்பது குறித்து அதிகம் பேசப்பட்டு வந்தது. வேட்புமனுத் தாக்கல் முடிவுற்ற ஒரு மணி நேரத்தில் திரு ஹெங் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், தேர்தலில் தாம் நிற்கப்போவதில்லை எனத் தெரிவித்தார்.

“சிங்கப்பூருக்கு சேவையாற்றுவதற்கு ஆற்றல்மிக்க புதிய அணிக்கு வழிவிட இது சரியான நேரம்,” என்றார் அவர்.

சிங்கப்பூரர்களின் நம்பிக்கையை வென்றுள்ள பிரதமர் வோங், தன்னம்பிக்கையிலும் ஆளுமையிலும் உயர்ந்துள்ளதாக திரு ஹெங் கூறினார். சிங்கப்பூரை ஆட்சி செய்ய பிரதமர் வோங்கிற்கு வலுவான அதிகாரமளிக்கும்படி சிங்கப்பூரர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் சேவையாற்றுவதில் தங்கள் வாழ்க்கைத்தொழிலை அர்ப்பணித்த துணைப் பிரதமர் ஹெங்கும் மூத்த அமைச்சர் டியோவும், பொதுச் சேவையில் ஜாம்பவான்கள் எனப் பிரதமர் வோங் புகழாரம் சூட்டினார்.

“இருவருமின்றி, சிங்கப்பூரால் இத்தனை ஆண்டுகள் சாதித்தவற்றை எட்டியிருக்க முடியாது. இங்கிருந்து சிங்கப்பூரை என்னால் முன்னெடுத்துச் செல்ல முடிகிறது என்றால் வலுவான, நீடித்த அடித்தளங்களை அமைக்க அயராது உழைத்த இவர்களைப் போன்ற தலைவர்களால்தான்,” என ஃபேஸ்புக் பதிவில் பிரதமர் வோங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்