சொத்து முகவர் தரகுத் தொகையை எவ்வாறு நிர்ணயிப்பது என்பது குறித்த வழிகாட்டிகள் இரண்டு மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அதற்கான வரவேற்பு மந்தமாகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் சொத்துகள் வாங்குபவர்கள் தங்கள் முகவர்களுக்கு எந்த தரகுத் தொகையும் வழங்குவதில்லை என்ற நடைமுறையை நீண்டகாலமாக கடைப்பிடித்து வருகின்றனர். புதிய வழிகாட்டிகள் இந்த நடைமுறையை மாற்றும் நோக்கம் கொண்டது.
இது குறித்துக் கூறும் சொத்து முகவர்கள், தனியார் சொத்து வாங்குபவர்களைப் பிரதிநிதிக்கும் முகவர்கள் சொத்து விற்பவர்களின் முகவர்களுடன் தங்களுக்கான தரகுத் தொகை பங்கு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்ய வேண்டியிருப்பதாகக் கூறுகின்றனர்.
இந்தத் தரகுத் தொகை வாடிக்கையாக வீட்டு விற்பனை விலையில் 2 விழுக்காடு என்று நிர்ணயிக்கப்படுகிறது. இதில் வீட்டு விற்பனையாளரின் முகவர் 1லிருந்து 1.5 விழுக்காட்டை தனக்குரிய தரகுத் தொகையாக எடுத்துக்கொள்கிறார். அந்த சொத்தை வாங்குபவரின் முகவரின் தரகுத் தொகை 0.5லிருந்து 1 விழுக்காடுவரை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதன் தொடர்பில், சிங்கப்பூர் சொத்து முகவர் சங்கம் (Singapore Estate Agents Association - SEAA) 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சொத்து முகவர் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது.
இதன்படி, சொத்து விற்பனை முகவர்கள் விற்பனையாளர்களிடமிருந்து தங்களுக்கான தரகுத் தொகையைப் பெற்றுக்கொள்வர். அதுபோல், சொத்து வாங்குபவர்கள் அல்லது வீட்டை வாடகைக்கு எடுப்பவர்களைப் பிரதிநிதிக்கும் முகவர்கள் தங்கள் தரகுத் தொகையை சொத்து வாங்குபவர்கள் அல்லது வாடகைதாரர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வழிகாட்டிகள் வகுக்கப்பட்டன.
சட்ட அதிகாரமில்லாத இந்த வழிகாட்டிகள் ஜூலை மாதம் நடப்புக்கு வந்தன.
இந்த வழிகாட்டிகள் சொத்து விற்பனையாளரின் முகவர், சொத்து வாங்குபவரின் முகவர் ஆகியோருக்கிடையிலான தரகுத் தெகை விவகாரத்தில் அதிக வெளிப்படைத்தன்மையை கொண்டுவரும் என்று சொத்து முகவர் சங்கம் கூறுகிறது.
தொடர்புடைய செய்திகள்
எனினும், சொத்தை வாங்குபவர்கள் அந்தச் சேவையை தற்போதைய நிலையில் இலவசமாகவே பெறுவதால் தங்களைப் பிரதிநிதிக்கும் முகவர்களுக்கு தரகுத் தொகை தர ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.