கூட்டுரிமை வீட்டில் கறையான்: நிர்வாகம்மீது தம்பதி தொடுத்த வழக்கில் வெற்றி

கூட்டுரிமை வீட்டில் கறையான்: நிர்வாகம்மீது தம்பதி தொடுத்த வழக்கில் வெற்றி

2 mins read
f7a807a7-9308-4b4c-b795-785ce0c7d079
கிளமெண்டியில் உள்ள ஃபிரீசியா உட்ஸ் கூட்டுரிமை தனியார் வீடுகளின் முகப்பு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கிளமெண்டியில் உள்ள ஒரு கூட்டுரிமை வீட்டில் கறையான்களால் பெருமளவு பாதிப்படைந்த வீட்டு உரிமையாளர்கள் அக்கட்டட நிர்வாகம்மீது வழக்குத் தொடுத்தனர்.

அவற்றை அகற்ற தங்களுக்கு ஏற்பட்ட செலவுகளை ஈடுசெய்ய அவர்கள் அவ்வாறு சட்ட நடவடிக்கை எடுத்தனர்.

ஃபிரீசியா உட்ஸ் கூட்டுரிமை வீடுகளின் (கொண்டோமினியம்) கூட்டுரிமை பட்டாக் கழக நிர்வாகம், வீட்டு உரிமையாளர்கள் அனுமதியின்றிச் சட்டத்துக்கு எதிராகச் சமையலறை ஒன்றை வடிவமைத்துக் கறையான்கள் வாழ்வதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்தியதாக நீதிமன்றத்தில் வாதாடியது.

இருப்பினும், கட்டட நிர்வாகம் நிலத்தடிக் கறையான்கள் அற்ற சூழலை அங்கு ஏற்படுத்தத் தவறியதாக நீதிமன்றம் தெரிவித்தது.

எனவே, பாதிக்கப்பட்ட தம்பதிக்கு கட்டடத்தின் பட்டாக் கழக நிர்வாகம் இழப்பீட்டுத் தொகையாக $10,978 வழங்கவேண்டும் என்று புதன்கிழமை (ஜூலை 15) தீர்ப்பளிக்கப்பட்டது.

அதோடு இதரச் செலவுகளுக்கு ஈடாக $42,750 கொடுக்கவேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டது.

கறையான்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் இதுவரை சிங்கப்பூரில் அறியப்படாத வழக்காக இது அமைந்துள்ளது.

கட்டடத்தில் கறையான்கள் புற்று உருவாகாமல் தடுப்பது நிலப்பட்டாக் கழக நிர்வாகத்தின் பொறுப்பு என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

மேலும் கறையான்கள் குறித்து சோதனை நடத்த கட்டட நிர்வாகம் நியமனம் செய்த நிபுணர், ஏற்கெனவே அக்கட்டடத்தில் பல ஆண்டுகளாகச் சோதனைகள் மேற்கொண்ட நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்து நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

அந்த நிபுணர் அவரது சோதனைகளில் நிலத்தடி கறையான்கள் அங்கு பெருகி வருவதைக் கண்டறியத் தவறிவிட்டார் என்று தெரிகிறது.

நிலத்தடியில் உள்ள கறையான்கள் எப்படி மேல்மாடிவீட்டுக்குச் செல்லமுடியும் என்று நிர்வாகத் தரப்பில் வாதாடப்பட்டது.

தம்பதியர் தரப்பில் பூச்சியியல் நிபுணர் டே ஜோ லின் கருத்துரைத்தார்.

சில மாடிகளைத் தவிர்த்து சில நேரங்களில் கறையான்கள் செங்குத்தாக மேல்மாடிகளுக்குச் செல்வது இயற்கையான ஒன்று என்றார் அவர்.

கறையான்களைப் பொறுத்தவரை, பலகட்டச் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்துதல் அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது. கட்டட நிர்வாகம் அடிக்கடி சோதனைகள் நடத்துவது, அவை இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக நிலத்தடி கறையான்களை முழுமையாக அழிக்கும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது முதலியவை அவற்றுள் அடங்கும்.

தம்பதியர் நிலப்பட்டாக் கழக நிர்வாகச் சட்டத்துக்குப் புறம்பாக எந்தச் செயலையும் செய்யவில்லை எனவும் நீதிபதி கூறினார்.

குறிப்புச் சொற்கள்