தீவிரவாதக் கருத்துகள்: பங்ளாதேஷ் ஊழியர் இருவரின் வேலை அனுமதி ரத்து

தீவிரவாதக் கருத்துகள்: பங்ளாதேஷ் ஊழியர் இருவரின் வேலை அனுமதி ரத்து

2 mins read
வெறுப்பைத் தூண்டுவோர் சட்டரீதியில் கடுமையாக நடத்தப்படுவார்கள்
708d7b12-faea-436f-a075-4d9004968e52
தீவிரவாதக் கருத்துப் பகிர்வு தொடர்பாக இருவரும் தனித்தனியாகவே விசாரிக்கப்பட்டதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சமூக வலைத்தளங்களில் தீவிரவாதக் கருத்துகளைப் பகிர்ந்த பங்ளாதேஷ் ஊழியர்கள் இருவரின் வேலை அனுமதி அட்டைகளைச் சிங்கப்பூர் அரசாங்கம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

தயானி முகம்மது ரிசாட் என்ற 25 வயது ஆடவரும், இஸ்லாம் சஹெதுல் என்ற 37 வயது ஆடவரும் இம்மாதம் பங்ளாதேஷுக்கு நாடு கடத்தப்பட்டனர். இதனை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெள்ளிக்கிழமை (ஜூலை 17) உறுதிப்படுத்தியது.

அந்த இருவரும் சிங்கப்பூரில் எங்குப் பணியாற்றினர் என்பது வெளியிடப்படவில்லை. ஜூலை மாதத்தில் அவர்கள் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையால் விசாரிக்கப்பட்டனர் என்று அத்துறையின் பேச்சாளர் கூறினார்.

அந்த இருவரும் சமூக ஊடகங்களில் தீவிரவாதம், பிரிவினையைத் தூண்டும் வகையிலான கருத்துகள் ஆகியவற்றைப் பதிவிட்டதால் விசாரிக்கப்பட்டனர்.

ரிசாட் தமது பதிவில் பங்ளாதேஷைச் சேர்ந்த, தீவிரவாதச் சிந்தனையுடைய எழுத்தாளர் ஷஹிஃபுர் ரஹ்மான் ஃபராபிக்கு ஆதரவு வழங்கியதோடு அதனைப் பலரிடம் பகிர்ந்தார்.

அந்த எழுத்தாளர் இறை நம்பிக்கை இல்லாத, மதச்சார்பற்ற சமூக ஊடகவியலாளர்கள்மீது வன்முறையைத் தூண்டியவர் ஆவார். பங்ளாதேஷ் தடை செய்துள்ள தீவிரவாத அமைப்புடன் அந்த எழுத்தாளருக்குத் தொடர்புடையதாக நம்பப்படுகிறது.

இஸ்ரேல்-ஈரான் பூசலைப் பற்றி உணர்வுகளைத் தூண்டும் வகையில் பதிவிட்டதாக சஹெதுல்மீது விசாரணை நடத்தப்பட்டது. இஸ்லாமியச் சமயச் சட்டத்தைப் பின்பற்றாத அரசாங்கங்களுக்குக்கீழ் வாழும் மக்கள் குறித்துப் பிரிவினைவாதக் கருத்துகளை அவர் பகிர்ந்துள்ளார்.

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டப்படி இதற்குமுன் விசாரிக்கப்பட்ட எவருடனும் இந்த இருவருக்கும் தொடர்பில்லை என்பதையும் துறை விளக்கியது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

பங்ளாதேஷ் ஊடகங்கள், அந்த இருவரும் ஜூலை 8ஆம் தேதி டாக்காவில் உள்ள ஹஸ்ரட் ஷாஜலால் அனைத்துலக விமான நிலையம் வந்திறங்கியவுடன் அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர் என்று செய்தி வெளியிட்டுள்ளன.

சிங்கப்பூரில் இருந்தபோது பங்ளாதேஷ் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர் என்று அங்குள்ள காவல்துறை அதிகாரிகள் தெரிவித்ததோடு மேல்விசாரணைக்கு அவர்களை தடுத்துவைத்துள்ளனர்.

அங்கு நடந்த விசாரணையில் 2023ஆம் ஆண்டில் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட கருத்துகளுக்குத் தான் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டதாக ரிசாட் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை விசாரணை

இது தொடர்பாக, சிங்கப்பூர் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தீவிர விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில், சம்பந்தப்பட்ட இருவரும் சிங்கப்பூருக்குள் எவ்விதமான பயங்கரவாதத் தாக்குதல்களையும் நடத்தத் திட்டமிடவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.

ஆயினும், தீவிரவாதத்தையும் பிரிவினையையும் தூண்டும் இவர்களது கருத்துகள், சிங்கப்பூரின் பல இன, பல சமயங்களைச் சார்ந்த சமூக ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் பெரிதும் அச்சுறுத்தலாக இருப்பதாக உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சிங்கப்பூரின் அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பேணிக்காப்பது மிக முக்கியமானது. அத்தகைய அமைதியைக் குலைக்கும் வகையிலோ வெவ்வேறு சமூகங்களுக்கு இடையே வெறுப்பைத் தூண்டும் வகையிலோ செயல்படுவோர் யாராக இருந்தாலும், சட்டரீதியாக அவர்கள் கடுமையாக நடத்தப்படுவார்கள் என்பதை இந்த நடவடிக்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

சிங்கப்பூரின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதிலும், சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதிலும் அரசாங்கம் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்
உள்துறை அமைச்சுஉள்துறைக் குழுவிசாரணைதீவிரவாதம்அமைப்புபங்ளாதே‌ஷ்ஊழியர்கள்