சிங்கப்பூரில் பயங்கரவாத மிரட்டல் தொடர்ந்து அதிகமாக இருப்பதாக உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் போன்ற உலகளாவிய பிரச்சினைகள் இதற்குக் காரணமாக உள்ளதாக அது கூறியது.
உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை 29) பயங்கரவாதம் தொடர்பான அதன் வருடாந்திர அறிக்கையை வெளியிட்டது.
காஸா போர் போன்றவற்றால் ஏற்படும் அவலநிலையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு தங்கள் அமைப்புகளின் கொள்கைகளை பயங்கரவாதிகள் பரப்புவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய, யூத இலக்குகளையும் இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்கும் நாடுகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்துமாறு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பும் அல் காய்தா அமைப்பும் தூண்டுகின்றன.
இதன் விளைவாக உலகளாவிய நிலையில் யூதர்களுக்கு எதிரான சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதுமட்டுமல்லாது, இஸ்லாமிய சமயத்தினருக்கு எதிரான வெறுப்புணர்வும் அதிகரித்துள்ளது என்று உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை கூறியது.
சிங்கப்பூரில் கூடிய விரைவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் என்று குறிப்பிட்டுச் சொல்லும் உளவுத்துறைத் தகவல்கள் ஏதும் இல்லை என்று அது தெரிவித்தது.
ஆனால் மேற்கத்திய நாடுகளுடனும் இஸ்ரேலுடனும் சிங்கப்பூர் நட்புறவு கொண்டிருப்பதாலும் மதசார்பற்ற, பல கலாசாரங்கள் ஒன்றடங்கிய நாடாகத் திகழ்வதாலும் பயங்கரவாதிகள் குறிவைக்கும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று எனத் தொடர்ந்து நம்பப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டுக்கான அறிக்கையை உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை ஜூலை மாதம் வெளியிட்டது. அதன் பிறகு, சுய தீவிரவாத போக்குக்கு ஆளான எட்டு பேருக்கு எதிராக அது நடவடிக்கை எடுத்துள்ளது.
அவர்களில் ஆறு ஆடவர்களும் இரண்டு பெண்களும் அடங்குவர். அவர்கள் 15 வயதுக்கும் 56 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
2023ஆம் ஆண்டு அக்போபர் மாதத்தில் இஸ்ரேல்-பாலஸ்தீன போர் வெடித்ததை அடுத்து, அவர்களில் நால்வர் சுய தீவிரவாத போக்குக்கு ஆளானதாகத் தெரிவிக்கப்பட்டது.
எஞ்சிய நால்வரில் இருவர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் சித்தாந்தங்களால் தீவிரவாத போக்குக்கு ஆளாகினர். வன்முறைமிக்க வலதுசாரி பயங்கரவாத சித்தாந்தத்தால் இருவர் தீவிரவாத போக்குக்கு ஆளாகினர்.
தனக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள், நடவடிக்கைகள் ஆகியவற்றிலிருந்து மீண்டு வரக்கூடிய ஆற்றலை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு கொண்டிருப்பதாகவும் உலகிலேயே ஆகப் பெரிய இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாக அது தொடர்ந்து இருப்பதாகவும் உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. அதனிடம் ஏறத்தாழ $12.9 மில்லியன் ரொக்கம் இருப்பதாகவும் சிரியாவிலும் ஈராக்கிலும் 1,500க்கும் 3,000க்கும் இடைப்பட்ட போராளிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வலதுசாரி பயங்கரவாத சித்தாந்தம் சிங்கப்பூரிலும் தலைதூக்கியுள்ளதாக உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை கூறியது. குறிப்பாக, இளையர்கள் சிலர் இப்போக்குக்கு ஆளாகியிருப்பதாக அது தெரிவித்தது.
2020ஆம் ஆண்டிலிருந்து இத்தகைய சித்தாந்தங்களைத் தழுவியதற்காக உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நான்கு இளையர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

