யுஓபிக்கு $125,000 செலுத்த டெரி ஸூவுக்கும் தி ஆன்லைன் சிட்டிசனை வெளியிடும் நிறுவனத்துக்கும் உத்தரவு

அவதூறு வழக்கு

யுஓபிக்கு $125,000 செலுத்த டெரி ஸூவுக்கும் தி ஆன்லைன் சிட்டிசனை வெளியிடும் நிறுவனத்துக்கும் உத்தரவு

2 mins read
1abb6c9f-8e56-4891-9832-5952838077ea
2022 ஏப்ரல் 21ஆம் தேதி அரசு நீதிமன்ற வளாகத்தில் திரு டெரி ஸூ. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

யுஓபி வங்கியை அவதூறு செய்ததற்காக, ‘தி ஆன்லைன் சிட்டிசன்’ இணையப்பக்கத்தின் தலைமை ஆசிரியர் டெரி ஸூ யுவான் சென்னுக்கும் அந்த இணையப்பக்கத்தை நிர்வகிக்கும் தைவானைச் சேர்ந்த ‘மியாவ் யி இன்ஃபோடெக்’ நிறுவனத்துக்கும் யுஓபியிடம் $125,000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் புதன்கிழமை (மார்ச் 4) உத்தரவிட்டது.

யுஓபி வங்கி, வாடிக்கையாளர்களிடம் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாகவும் நிதி மோசடி, குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகவும் தி ஆன்லைன் சிட்டிசன் தளம் தொடர்ச்சியாக கட்டுரைகளையும் சமூக ஊடகப் பதிவுகளையும் வெளியிட்டதாக யுஓபி அவதூறு வழக்கு தொடுத்திருந்தது.

முன்னதாக, அமைச்சர்கள் இருவருக்கு அவதூறு விளைவித்ததாக தொடுக்கப்பட்ட வேறொரு வழக்கில் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து திரு ஸூ, தைவானுக்குப் புலம்பெயர்ந்துள்ளார்.

2026 பிப்ரவரி 26ஆம் தேதி உச்ச நீதிமன்றத்திலிருந்து காரில் புறப்படும் உள்துறை அமைச்சர் கா.சண்முகம்.
2026 பிப்ரவரி 26ஆம் தேதி உச்ச நீதிமன்றத்திலிருந்து காரில் புறப்படும் உள்துறை அமைச்சர் கா.சண்முகம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வழக்கு விவரம்

யுஓபியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் கட்டுரை ஒன்று 2025 மார்ச் 27ஆம் தேதி தி ஆன்லைன் சிட்டிசனில் வெளியானது. அந்தக் கட்டுரையை இணைக்கும் மூன்று ஃபேஸ்புக் பதிவுகளும் வெளியிடப்பட்டன.

கட்டுரை வெளியான அடுத்த நாளே யுஓபி வழக்கறிஞர்கள் கோரிக்கைக் கடிதம் அனுப்பியும், அதனைப் பொருட்படுத்தாமல் மற்றுமொரு கட்டுரையையும் அதன் தொடர்பிலான ஃபேஸ்புக் பதிவையும் தி ஆன்லைன் சிட்டிசன் வெளியிட்டது.

2025 மார்ச் 29ஆம் தேதி, மேலும் இரு கட்டுரைகளை அது வெளியிட்டது.

இந்த வழக்கில் திரு ஸூவும் தி ஆன்லைன் சிட்டிசனை நிர்வகிக்கும் நிறுவனமும் யுஓபிக்கு அவதூறு விளைவித்ததை நீதிமன்றம் கண்டறிந்தது. பிரதிவாதிகள் தரப்பில் எவ்வித விளக்கமோ எதிர்ப்போ தாக்கல் செய்யப்படவில்லை.

இழப்பீட்டுத் தொகையாக $125,000க்கும் கூடுதலாக, நீதிமன்றச் செலவுகளுக்காக $16,500யும் இதர செலவுகளுக்காக ஏறக்குறைய $1,500யும் செலுத்த பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்