தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தானியக்க வாகனங்கள் சாலைகளில் செல்லும் முன் சந்திக்கும் சோதனைகள்

2 mins read
c3e4a69d-803b-4b18-8a2c-cca8d3f7170d
தானியக்க வாகனங்கள் பொதுச் சாலைகளைப் போன்று வடிவமைக்கப்பட்ட தடங்களில் முதற்கட்ட அடிப்படைச் சோதனைகளை நிறைவேற்றியாக வேண்டும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தானியக்க வாகனங்கள் சாலைகளில் செல்லும் முன்னர் பல சோதனைகளில் தேர்ச்சி பெற்றாகவேண்டும். மோட்டார்வாகனங்களை ஓட்டுவோரைப் போன்றே அவற்றுக்கும் சோதனைகள் உண்டு.

தானியக்க வாகனங்கள் பொதுச் சாலைகளைப் போன்று வடிவமைக்கப்பட்ட தடங்களில் முதற்கட்ட அடிப்படைச் சோதனைகளை நிறைவேற்றியாக வேண்டும்.

அந்தத் தடங்கள் 1.8 ஹெக்டர் பரப்பளவில் பூன் லேயில் உள்ள நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தானியக்க வாகனங்களின் சோதனை, ஆய்வுக்கான உன்னத நிலையத்தில் அமைந்துள்ளன.

முதல் அடிப்படைச் சோதனை “மைல்ஸ்டோன் ஒன்” என்று வழங்கப்படுகிறது. நிற்கும் அல்லது நகரும் தடைகளுக்கு ஏற்றவாறு நிற்பதிலும் செயல்படுவதிலும் தானியக்க வாகனங்களுக்கு உள்ள ஆற்றலை அது சோதிக்கிறது. வாகனங்களால் அவசரமாக நிறுத்தமுடிகிறதா என்பதும் சோதிக்கப்படுகிறது.

செப்டம்பர் 25ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் தானியக்க வாகனத்தின் செயல்பாட்டை நேரடியாகப் பார்ப்பதற்காக நிலையத்திற்குச் சென்றிருந்தது.

தானியக்க வாகனங்கள் ஒன்றரை மாதப் பயிற்சிக்கும் தயாரிப்பு முன்னேற்பாடுகளுக்கும் பிறகு சோதனைகளில் தேர்ச்சி பெற்றன.

கருநீல வண்ணம் கொண்ட தானியக்க வாகனங்களில் ஐந்து இருக்கைகள் உள்ளன. வாகனங்களில் 11 ஒளிப்பதிவுக் கருவிகளும் அவற்றின் வெளிப்புறத்தில் நான்கு லிடார் உணர்கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. பயணிகளையும் பொருள்களையும் கண்டறிய ஒளிப்பதிவுக் கருவிகள் உதவும். லிடார் உணர்கருவி, ஒளிக்கற்றைகளின் மூலம் தொலைவை அளவிட்டு, சுற்றுச்சூழலின் முப்பரிமாண வரைபடங்களை விரிவான முறையில் உருவாக்கித் தரும்.

தடங்களில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு சோதனைக்கும் கிட்டத்தட்ட ஐந்து மணிநேரமாகும். சோதனை அறிக்கை வெளிவருவதற்கு ஒரு வாரம்வரை ஆகலாம்.

நிலப் போக்குவரத்து ஆணையத்தின் சோதனைக் கட்டமைப்பின்கீழ் தானியக்க வாகனங்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட சோதனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

முதற்கட்ட அடிப்படைச் சோதனையை முடித்த பிறகு, தானியக்க வாகனங்கள் அவற்றுக்கென ஒதுக்கப்பட்ட பாதைகளில் பயணிகள் இல்லாமல் ஒத்திகைப் பயணத்தை மேற்கொண்டாக வேண்டும். தொலைவிலிருந்து தானியக்கக் கருவிகளின் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த முடிகிறதா என்பதும் சோதித்துப் பார்க்கப்படும்.

ஆணையத்துடன் இணைந்து சோதனைகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் வழிகளை ஆராயத் திட்டமிடுகிறது நிலையம்.

குறிப்புச் சொற்கள்