சிங்கப்பூரர்கள் அதிகம் பயன்படுத்தும் ‘பேநவ்’ (PayNow) வசதியை, மோசடிப் பேர்வழிகள் தற்போது குறிவைத்திருப்பதாகக் காவல்துறையினர் டிசம்பர் 13ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.
புதிதாகக் கிளம்பியுள்ள இந்த மோசடியில், ஒருவருக்கு முதலில் குறுந்தகவல் அனுப்பப்படும். அதில் ஒருவரின் ‘பேநவ்’ சான்றிதழ் விரைவில் காலாவதி ஆகவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். சேவையைத் தொடர்ந்து பெற அந்தச் சான்றிதழைப் புதுப்பிக்க வேண்டும் என்றும் அதற்காக ஓர் இணைப்பும் வழங்கப்பட்டிருக்கும்.
அந்த இணைப்பைச் சொடுக்குவோர், போலியான ஒரு ‘பேநவ்’ இணையத்தளத்திற்குக் கொண்டு செல்லப்படுவர். ‘பேநவ்’ சான்றிதழைப் புதுப்பிக்க கடன் அட்டை விவரங்கள், வீட்டு முகவரி, பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை உள்ளீடு செய்யுமாறு கோரப்படும்.
பொதுமக்களுக்கு மின்னிலக்கச் சான்றிதழ்களை ‘பேநவ்’ வழங்குவதில்லை என்று காவல்துறையினர் சுட்டினர். அத்துடன், பொதுமக்கள் தங்களின் தனிநபர், கடன் அட்டை விவரங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான இணையத்தளத்தையும் ‘பேநவ்’ இயக்கவில்லை என்று தெளிவுபடுத்தினர்.
‘பேநவ்’ தொடர்பான இணைப்புகள் அல்லது குறுந்தகவல்கள் குறித்து சந்தேகம் ஏதேனும் எழுந்தால் உடனே வங்கிகளின் அதிகாரபூர்வ தொடர்பு எண்களின்வழி வங்கிகளிடம் உதவி நாடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.