தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தைமகள் கொடுத்த நன்னம்பிக்கை

4 mins read
e0b4abec-239e-419f-a008-6a4631125fa6
ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவிலில் பொங்கல் கொண்டாட்டம். - படம்: சரவணன்

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற, தமிழர் மனங்களில் ஆழ வேரூன்றியுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாக வருங்காலம் சிறப்பாக அமைய வேண்டும் எனும் எதிர்பார்ப்புகளுடன் தீவெங்கிலும் உள்ள கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்.

நம்பிக்கை, மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு, நன்றியுணர்வு, ஏக்கம் என உணர்ச்சிகளின் கலவையாக மக்கள் தென்பட்டனர்.

200 கிலோ பிரம்மாண்டப் பொங்கல்

ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவிலில் வழிபட்ட பக்தர்கள்.
ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவிலில் வழிபட்ட பக்தர்கள். - படம்: லாவண்யா வீரராகவன்

சிராங்கூன் ரோடு ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவிலில் காலை 5.30 மணிக்கே தொடங்கிய திருப்பள்ளி எழுச்சியைத் தொடர்ந்து 6 மணிக்கு இரண்டு பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது.

நூற்றுக்கணக்கானோர் ‘பொங்கலோ பொங்கல்’ என முழங்க, பொங்கிய பொங்கலை பிள்ளையாருக்கும் சூரியனுக்கும் படைத்து நன்றி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து நாள்முழுதும் வரும் பக்தர்களுக்கு வழங்க ஏதுவாக 200 கிலோ பொங்கல் தயார் செய்யப்பட்டுள்ளதாகச் சொன்னார் கோவிலின் தலைமைப் பட்டர் சேதுராமன்.

ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் சூரிய வழிபாடு

சிராங்கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் காலை ஆறு மணிக்கு சுப்ரபாதத்தில் தொடங்கி, எட்டு மணியளவில் பொங்கல் வைத்து படைக்கப்பட்டது.

“பக்தர்கள் திரளாகப் பங்கேற்றது மகிழ்ச்சி,” என்றார் தலைமைப் பட்டர் வாசுதேவ பட்டாச்சாரியர், அனைவரது நல்ல நோக்கங்களும் நிறைவேற வேண்டும் என இறைவனிடம் வேண்டிக்கொள்வதாகவும் சொன்னார்.

இரவு 7.30 மணிக்கு நடக்கும் உற்சவர் புறப்பாடு பொங்கல் திருநாளின் சிறப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.

உணர்ச்சிப் பெருக்குடன் பக்தர்கள்

தெம்பனிஸ் வட்டாரவாசிகளான ரோஸ்மேரி - சுப்பிரமணி இணையருக்கு அண்மையில் மகள்வழி பேத்தி பிறந்துள்ளது அவர்கள் வாழ்வில் குதூகலத்தை வரவழைத்துள்ளது.

“பேத்தி நல்ல முறையில் வளர்ந்து வாழ்வில் சிறக்க வேண்டும் என்பதே என் தலையாய வேண்டுதல். இன்றைய நாளிலிருந்தே அவளுக்கு எல்லாம் நல்லதாக நடக்கும் எனும் நம்பிக்கை பிறந்துள்ளது”, என்று கூறினார் ரோஸ்மேரி.

குடும்பத்தைவிட்டு தனியே வசித்து வரும் மாணவர் பராமரிப்பு ஆசிரியரான (Student Care Teacher) ஜனா, “எங்கள் குடும்ப ஒற்றுமையும் பிணைப்பும் மேம்பட வேண்டும் என விரும்புகிறேன்”, என்றார். அனைவருடனும் நேரம் செலவிட ஆசைப்படுவதாகவும், அது இவ்வாண்டு அதிகரிக்கும் என நம்புவதாகவும் அவர் சொன்னார்.

“காலை வீட்டில் பொங்கல் செய்து படைத்தபின் முதல் வேலை கோவிலுக்கு வருவதுதான்”, என்றார் அரசு ஊழியர் துர்கா. “ஆண்டுதோறும் இந்நன்னாளில் அனைவரது நல்வாழ்வுக்காக வேண்டிக்கொள்வது வழக்கம். வரும் ஆண்டு அனைவர்க்கும் இனியதாக அமைய வேண்டும்”, என்றார் அவர்.

“எல்லாம் அவன் செயல் என்பது என் நம்பிக்கை. கோவிலுக்கு வந்து ஆண்டவன் மீது அனைத்து எதிர்பார்ப்புகளையும் வைத்து விடுவேன். இந்த ஆண்டு நல்லதாக அமைய வேண்டும்”, என்றார் ரெட் ஹில் பகுதியிலிருந்து வந்திருந்த ஓய்வு பெற்ற உற்பத்தித்துறை ஊழியர் ராஜேஸ்வரி தேவி.

“நான் பணிப்பெண்ணாகப் பணியாற்றும் வீட்டின் முதலாளி 25 நாள்களுக்குமுன் தவறிவிட்டார். கடந்த 30 ஆண்டுகளில் அவர் இல்லாத முதல் பொங்கல் இது. அதனாலேயே வீட்டில் இருக்காமல் கோவிலுக்கு வந்துவிட்டேன்”, என்று கண்ணீர் மல்கக் கூறினார் தெம்பனிஸ் பகுதியிலிருந்து வந்திருந்த சரஸ், 53.

“பொங்கல் தினத்தன்று சிறப்பு பரிசுகள் வழங்குவது, என்னையும் குடும்பத்தில் ஒருவராகக் கருதி சிறப்பு இனிப்புகள், உணவு வழங்குவார். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்பது எனது வழிபாடு”, என்றார் அவர்.

“இந்த ஆண்டு என் வாழ்வின் தரம் உயர வேண்டும். பொருளியல் சூழல் சற்றே முன்னேற்றம் காணும் என நம்புகிறேன்”, என்றார் இயூ டீ பகுதிவாசியான சுலோச்சனா, 44.

ஹவ்காங் பகுதியிலிருந்து வந்த எழுத்தாளர் அஸ்வினி இன்றைய நாளை நன்றி செலுத்தும் தினமாகப் பார்க்கிறார். “எனக்கு கிடைத்துள்ள ஆசீர்வாதங்களுக்கு நன்றி தெரிவிப்பது என் வழக்கம். அது என் அடுத்த இலக்குகளை நோக்கி என்னை ஓடச்செய்யும் ஊக்கத்தை வழங்கும் என நம்புகிறேன்”, என்றார்.

வெளிநாட்டு ஊழியர்களின் ஏக்கம்

ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவிலில் திரண்ட பக்தர்கள்.
ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவிலில் திரண்ட பக்தர்கள். - படம்: லாவண்யா வீரராகவன்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து சிங்கப்பூரில் பணியாற்றுவோர் தங்கள் பாரம்பரிய முறைப் பொங்கல் கொண்டாட்டங்களில் ஈடுபட முடியாததால் கோவில்களில் நடக்கும் கொண்டாட்டங்களில் திரளாகப் பங்கேற்றனர்.

குடும்பத்தினரையும், நண்பர்களையும், கிராமங்களையும் விட்டு வெகுதூரம் வந்து பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் குடும்ப நல்வாழ்வுக்காக வேண்டிக்கொண்டதாகப் பகிர்ந்தனர்.

“எங்கள் ஊரில் வீட்டுக்கு வெளியில் பெரிய கோலமிட்டு பொங்கல் வைத்து சூரியனுக்குப் படைத்து, சுற்றம், நண்பர்கள் சூழ கொண்டாடி மகிழ்வோம். கோவிலில் நடக்கும் பொங்கலைப் பார்த்து அந்த ஏக்கத்தைப் போக்கிக் கொள்கிறேன்”, என்றார் தமிழ்நாட்டின் அரியலூர் பகுதியைச் சேர்ந்த உற்பத்தித்துறை ஊழியர் கொளஞ்சிநாதன்.

தனது மனைவி, மகளை நினைத்துக் கொள்வதாகக் கூறிய அறந்தாங்கியைச் சேர்ந்த பிரம்மய்யா, “காலையில் காணொளிக் காட்சியாக எங்கள் வீட்டுப் பொங்கலைப் பார்த்தேன். அவர்களின் மகிழ்ச்சிக்காகவே இங்கு வந்துள்ளேன் என்று நினைத்துக்கொண்டேன். குடும்பச்சுமை மனத்தில் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும். கோவிலுக்கு வருவது சற்றே மன நிம்மதியைத் தந்துள்ளது,” என்றார்.

சுற்றுப்பயணிகள் வியப்பு

சிங்கப்பூருக்கு முதன்முறையாக சுற்றுப்பயணம் வந்துள்ள அருள்மணிக்கும் பிருந்தாவிற்கும் இங்குள்ள கோவில்களில் இடம்பெறும் பொங்கல் நிகழ்ச்சிகள்  வியப்பளிப்பதாக அமைந்தன.

“ஊரில் பொங்கல் சிறப்பாக நடக்கும். இங்கு பொங்கல் கொண்டாட்டங்கள் சிறிய அளவில் நடக்கும் என நினைத்தோம். இங்கு பாரம்பரிய முறைப்படி கூட்டமாக அனைவரும் கோவிலுக்கு வந்து பொங்கல் கொண்டாடுவதை பார்க்கவே மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் உள்ளது,” என்று அவர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்