தாய்லாந்தின் இளவரசி மகா சக்ரி சிரிந்தோர்ன் சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) சிறப்பு வருகையளித்துள்ளார்
நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங் இளவரசி சிரிந்தோர்னை வரவேற்றார்.
உள்துறை இரண்டாம் அமைச்சர் சிம் ஆன், நாடாளுமன்றத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அமர்வை சிறிது நேரம் நிறுத்திவைத்து, இளவரசியையும் அவருடன் வந்திருந்த பிரமுகர்களையும் திரு சியா அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்தார்.
நாடாளுமன்றத் துணை நாயகர் கிறிஸ்டஃபர் டி சூசாவுடன் இளவரசி சிரிந்தோர்ன் அமர்ந்தார்.
“இளவரசி சிரிந்தோர்ன் சிங்கப்பூரின் நீண்டகால தோழி. இருதரப்பு உறவைக் குறிப்பாகக் கல்வி, சுகாதாரப் பராமரிப்பு, அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றை வலுப்படுத்துவதில் அவர் முக்கிய பங்காற்றினார்,” என்று சியா சொன்னார்.
தாய்லாந்தின் சுலாசொம்கிலாவ் அரச ராணுவக் கழகத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் பயிற்சி வீரர்களும் நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தனர்.
தாய்லாந்து மன்னர் வஜ்ஜிரலோங்கோர்னின் இளைய சகோதரியான இளவரசி, சிங்கப்பூரின் வரலாற்றையும் மேம்பாட்டையும் பற்றி அறிந்துகொள்ள மூன்று நாள் அதிகாரபூர்வப் பயணமாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து இங்கு இருக்கிறார்.
சிங்கப்பூரிலும் தாய்லாந்திலும் உள்ள இளம் அறிவியலாளர்களிடையே நீண்டகால பந்தத்தை ஏற்படுத்த காரணமாக இருந்த அனைத்துலக இளம் அறிவியலாளர்கள் உச்சநிலைச் சந்திப்புக்கு 71 வயது இளவரசி சிரிந்தோர்ன் உறுதியான ஆதரவை அளித்துவருவதை திரு சியா பாராட்டினார்.


