கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் கைதான தாய்லாந்து மாது கிட்டத்தட்ட ஈராண்டுகளுக்குப் பின், $32 மில்லியன் பெறுமானமுள்ள ஆடம்பரப் பொருள்கள் தொடர்பான மோசடிக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.
பன்சுக் சிரிவிப்பா என்ற அம்மாதின் வழக்குக்கு முந்தைய கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அவர் இவ்வாண்டு அக்டோபர் மாதம் தம்மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வார் என்று தெரியவந்துள்ளது.
திருவாட்டி பன்சுக்மீது 180க்கும் மேலான குற்றச்சாட்டுகள் உள்ளன. அவை ஏமாற்றுதல், கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியது, $198,000க்கும் அதிக பெறுமானமுள் மற்றவரின் ஆடம்பர கைக்கடிகாரங்களைத் தன்னுடைமையாக்கியது ஆகியவை தொடர்பானவை.
இதில் அவருடைய கணவரான பி ஜியாபெங்கிற்கு எதிரான வழக்கு இன்னமும் வழக்குக்கு முந்தைய கலந்துரையாடல் நிலையிலேயே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியாபெங் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில், அவர் எப்பொழுது குற்றங்களை ஒப்புக்கொள்வார் என்பது தெரியவில்லை. இது குறித்து அவருடைய வழக்கறிஞர் ஆகஸ்ட் 30ஆம் தேதி தகவல் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குற்ற வழியில் ஈட்டிய பணத்தைக் கொண்டு விலையுயர்ந்த கார்கள் வாங்கியது, தன் மனைவி பன்சுக் சிங்கப்பூரிலிருந்து அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் $200,000ஐ வெளிநாடுகளுக்கு அனுப்ப உதவியது போன்றவை ஜியாபெங் மீதான குற்றச்சாட்டுகளில் அடங்கும்.
ஏமாற்றுக் குற்றங்களில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின்பேரில் ஜியாபெங் 2022 ஜூன் 27ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவருடைய கடப்பிதழ் பறிமுதல் செய்யப்பட்டு, பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அவர் மனைவி பன்சுக் காவல்துறை விசாரணைக்கு உதவி வந்தார். அவர் தமது கடப்பிதழைக் காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
பின்னர் கணவன், மனைவி இருவரும் சிங்கப்பூரைவிட்டு வெளியேறினர்.
அவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட, காவல்துறையால் தேடப்படும் நபர்களாகினர்.
பினன்ர் ஆகஸ்ட் 10ஆம் தேதி அவ்விருவரும் ஜோகூர் பாரு ஹோட்டல் ஒன்றில் இருப்பதாக தாய்லாந்துக் காவல்துறையிடமிருந்து தகவல் கிடைத்ததை அடுத்து, அதற்கு மறுநாள் இருவரும் கைது செய்யப்பட்டு சிங்கப்பூருக்கு அழைத்து வரப்பட்டனர்.

