கம்போடியாவுடனான கடல்துறைப் பிரச்சினையில் அமைதித் தீர்வுக்கான நிலைப்பாட்டில் தாய்லாந்து மறுவுறுதி

கம்போடியாவுடனான கடல்துறைப் பிரச்சினையில் அமைதித் தீர்வுக்கான நிலைப்பாட்டில் தாய்லாந்து மறுவுறுதி

2 mins read
cc2fdd1b-10ef-457b-bdbf-3eaa6573e94a
தாய்லாந்து துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான சிஹாசக் புவாங்கெட்கியோ தலைமையிலான தாய்லாந்து தூதுக்குழு, சிங்கப்பூரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் கடல் சட்டத்தின்கீழ் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான நல்லிணக்க ஆணையத்தின் முதல் கூட்டத்தில் கலந்துகொள்கிறது. - படம்: தாய்லாந்து வெளியுறவு அமைச்சு

கடல்துறை தொடர்பான உரிமைகோரல்கள் குறித்து தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தை ஒரு பரபரப்பான சூழலில் தொடங்கியது.

இதில், தனது அண்டை நாடான கம்போடியா முன்வைக்கும் கோரிக்கைகள் சுயநலம் சார்ந்தவை மற்றும் பாசாங்குத்தனம் கொண்டவை என்று தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சர் குற்றம் சாட்டினார்.

முன்னதாக இந்த எல்லைப் பிரச்சினைகள் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை தாய்லாந்து ரத்து செய்திருந்த நிலையில், கம்போடியாவின் வெளியுறவு அமைச்சர் பிராக் சோகோன் இந்தப் பேச்சுவார்த்தையை அனைத்துலக சட்டத்திற்கு இணங்க அமைதியான முறையில் முன்னேறுவதற்கான ஒரு வழியாக முன்வைத்தார்.

கடுமையான தொனியில் அமைந்த தமது உரையில், தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் சிஹாசக் புவாங்கெட்கியோ, இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்குப் பதிலாக, “கம்போடியா பொய்யான தகவல்களைப் பரப்பி தாய்லாந்தை மீண்டும் மீண்டும் இழிவுபடுத்தி வருகிறது,” என்று கூறினார்.

“தார்மீக ரீதியாகத் தாங்களே உயர்ந்தவர்கள் என்று காட்டிக்கொள்ளும் நோக்கத்துடன், தாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்ற பாவனையை வெளிப்படுத்தி கம்போடியா இவ்வாறு செயல்படுகிறது,” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

“இந்த மோதலுக்குக் காரணமான நிகழ்வுகளை நாம் நினைவுகூர வேண்டும். எங்கள் தலைவர்களுக்கு இடையிலான தனிப்பட்ட தொலைபேசி உரையாடலை கம்போடியா பொதுவெளியில் கசியவிட்டது. கம்போடியாவின் ஏவுகணை தாக்குதலில் அப்பாவி தாய்லாந்து பொதுமக்கள் கொல்லப்பட்டனர். கம்போடியா புதைத்த கண்ணிவெடிகளில் சிக்கி எங்கள் வீரர்கள் தங்கள் கால்களை இழந்தனர். இச்சமயங்களில் அனைத்துலக சட்டத்திற்கான மரியாதை எங்கே இருந்தது,” என்று திரு சிஹாசக் சாடினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் கடல்சார் சட்ட ஒப்பந்தத்தின் (உன்குளோஸ்) கீழ் அமைக்கப்பட்டிக்கும் ‘இணக்கத் தீர்வு ஆணையத்தின்’ முன் இவ்விரு அமைச்சர்களும் தங்கள் தொடக்க உரைகளை நிகழ்த்தினர்.

சிங்கப்பூரில் உள்ள ‘நிரந்தர நடுவர் மன்றத்தின்’ அலுவலகத்தில் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில், இரு அமைச்சர்களுக்கும் தலா 15 நிமிடங்கள் பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

“புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்ய தாய்லாந்து எடுத்த முடிவே, இத்தகைய நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டிய கட்டாயத்தை கம்போடியாவுக்கு ஏற்படுத்தியதாக அந்நாடு கூறுகிறது. ஆனால், இது முற்றிலும் உண்மையில்லாத ஒன்று,” என்று சிஹாசக் கூறினார்.

கிட்டத்தட்ட ஓராண்டு காலம் வரை நீடிக்கக்கூடிய இந்தக் கட்டாய இணக்க முயற்சி ஒரு சட்டரீதியான தீர்ப்பு அல்ல. அதன் இறுதி முடிவும் இரு தரப்பையும் கட்டுப்படுத்தக்கூடியது அல்ல. இருப்பினும், இவ்வாணையத்தின் உதவியுடன் இரு நாடுகளும் இப்போது முன்னேற்றத்திற்கான ஒரு வழியைக் கண்டறிய முடியும் என்று தாங்கள் நம்புவதாக பகுப்பாய்வாளர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்
தாய்லாந்துகம்போடியாகடல்துறை