வரும் தைப்பூச தினத்தன்று நடைபெறும் மாபெரும் ஊர்வலத்தில் பங்கேற்று வேண்டுதல் செலுத்துவதற்குத் தேவைப்படும் அனுமதிச்சீட்டை முன்கூட்டியே பெறாத பக்தர்களுக்கு, வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அனுமதிச்சீட்டுகளுக்குப் பதிவு செய்வதற்கான இணையத்தளம், ஜனவரி 27ல் எதிர்பாராமல் மூடப்பட்டதை அடுத்து பக்தர்களுக்கிடையே அதிருப்தி மூண்ட நிலையில், இந்தப் புதிய ஏற்பாட்டைக் கலாசார, சமூக, இளையர்துறை துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ், வியாழக்கிழமை (ஜனவரி 29) அறிவித்தார். சனிக்கிழமை (ஜனவரி 31) நண்பகல் வரை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்கு நேரில் சென்று பக்தர்கள், பால்குடங்களுக்கான சீட்டுகளைப் பெறலாம் என அந்த அறிவிப்பு குறிப்பிட்டது.
பாதயாத்திரையில் பங்கேற்க இயலாத பக்தர்கள், அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலில் சனிக்கிழமை நண்பகல் வரை தங்களுக்கான பால்குட பதிவுச் சீட்டை வாங்கிக் கொள்ளலாம்.
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை காலையில் சென்ற செய்தியாளர்கள், பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்ததைக் கண்டனர். பால்குடச் சீட்டை வாங்கத் தவறிய 39 வயது கடல்துறைப் பணியாளர் ஜெகதீஷ்வரி ஜெகநாதன், இம்முறை வாங்க முடிந்ததை எண்ணி மகிழ்வதாகத் தெரிவித்தார். பல ஆண்டுகளாக இந்த வேண்டுதலைச் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்ட திருவாட்டி ஜெகதீஷ்வரி, மற்ற ஆலயங்களுக்குச் செல்வதைக் காட்டிலும் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பையே அதிகம் விரும்புவதாகக் கூறினார். இருந்தபோதும், நுழைவுச்சீட்டுகளுக்கான காத்திருப்பு நேரம் அதிகமாக இருந்ததாகவும் அவர் கூறினார். காலை 9.30 மணிக்கு ஆலயம் சென்ற திருவாட்டி ஜெகதீஸ்வரி, அனுமதிச்சீட்டு வாங்குவதற்குள் காலை 10.40 மணி ஆனதைக் குறிப்பிட்டார். அலகுக் காவடிகளுடன் செல்லக்கூடிய பிற்பகல் நேரச் சீட்டு பெற்றது குறித்தும் அதிருப்தி அடைவதாகக் கூறினார். “கூடுதல் நுழைவுச்சீட்டுகளை வாங்க முற்பட்ட ஒரு சிலரிடம் மீண்டும் வரிசையில் நிற்கும்படி கூறப்பட்டதைக் கண்டேன். நெடுநேரம் கால்கடுக்க காத்திருந்த எங்களில் பலர் அதிருப்தி அடைவதைக் கண்டேன்,” என்று அவர் கூறினார். காலை எட்டு மணிக்கு முன்பாகவே கோயிலுக்குச் சென்றிருந்த யோகேஸ்வரி விஜயன் போன்ற வேறு சிலரின் அனுபவம் சுமுகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. “ஆலயத்திற்குக் காலை 7.40 மணிக்குச் சென்றிருந்தபோது கிட்டத்தட்ட 50 பேர் அங்கு காத்திருந்ததைக் கண்டேன். அனுமதிச் சீட்டு பெறுவதற்குக் கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் ஆனது,” என்று தொடர்புத் துறையில் பணியாற்றும் நாற்பது வயது மதிக்கத்தக்க யோகேஸ்வரி கூறினார். ஜனவரி 27ல் இணையப் பதிவுத்தளம் எதிர்பாராமல் மூடப்பட்டதை அடுத்து பக்தர்கள் சிலர், வேண்டுதல் செலுத்தும் வாய்ப்பு கிட்டவில்லையே என்ற ஆதங்கத்தைச் சமூக ஊடகங்களில் பதிவு செய்தனர். கூடுதலான பக்தர்களை ஒருங்கிணைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத் தலைவர் வி. செல்வம் தெரிவித்தார். நேரில் சென்று வரிசையில் நின்ற பக்தர்கள் அனைவருக்கும் அனுமதிச்சீட்டு உண்டு என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
மாலை நேரத்தில் கூட்டம் இன்றி வழக்கம்போலக் காணப்பட்டிருந்தது. புதியஅறிவிப்பைத் தாமதமாக, வெள்ளிக்கிழமை பிற்பகலில் அறிந்த 40 வயது அரசாங்க ஊழியர் ராஜ், மாலை நேரத்தில் நுழைவுச்சீட்டு வாங்கினார்.
முன்னதாக வேண்டுதல் செலுத்த நான் பதிவு செய்யவில்லை. ஆனால் இப்போது பதிவு செய்வதற்கான வாய்ப்பு மீண்டும் வந்தவுடன் பால்குடம் எடுக்கவேண்டும் எனத் திடீரென விரும்பினேன்,” என்று அவர் கூறினார்.
இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சரோஜினி பத்மநாதன் அறிக்கை ஒன்றில், “தைப்பூசத்தின் முக்கிய செயல்பாட்டுக்கான காலகட்டத்தில் நாம் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், தயார்நிலைக்கும் பக்தர்களுக்கான பாதுகாப்பு வசதிகளுக்கும் நாங்கள் உடனடியாக முக்கியத்துவம் தருகிறோம்,” எனத் தெரிவித்துள்ளார்.

