தைப்பூசம் 2027: ஞாயிற்றுக்கிழமை முன்பதிவு தொடக்கம்

தைப்பூசம் 2027: ஞாயிற்றுக்கிழமை முன்பதிவு தொடக்கம்

தைப்பூசம் 2027 விழாவில் நேர்த்திக்கடன் செலுத்தும் அனைத்து பக்தர்களுக்கும் இணையவழிப் பதிவு கட்டாயம்.
கோப்புப் படம்: தமிழ் முரசு

27 Nov 2026 - 10:13 pm

2 mins read

சிங்கப்பூரின் முக்கிய இந்து விழாக்களில் ஒன்றான தைப்பூசம் அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று கொண்டாடப்படும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் அறிவித்துள்ளது.

ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், இந்து அறக்கட்டளை வாரியம் ஆகியவை இணைந்து ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் இவ்விழாவின் ஒரு பகுதியாக, இந்து பக்தர்கள் சிராங்கூன் சாலையில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்து டேங்க் ரோட்டில் உள்ள ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்கு காவடிகளும் பால்குடமும் சுமந்து நடைப்பயணம் செய்வர்.

தைப்பூசம் 2027 விழாவில் நேர்த்திக்கடன் செலுத்தும் அனைத்து பக்தர்களுக்கும் இணையவழிப் பதிவு கட்டாயம்.

அலகுக் காவடி, ரதக் காவடிக்கான இணையவழி நுழைவுச்சீட்டு முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 29) காலை 9 மணிக்குத் தொடங்கும்.

பால்குடம், பால்காவடி, தொட்டில் காவடி ஆகியவற்றிற்கான இணையவழி நுழைவுச்சீட்டு முன்பதிவு திங்கட்கிழமை (நவம்பர் 30) காலை 10 மணிக்குத் தொடங்கும். அனைத்திற்கும் https://thaipusam.sg என்ற இணையத்தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

ஊர்வல ஏற்பாடுகள், போக்குவரத்து நிர்வாகம், கோயில் நுழைவு வழிகாட்டி நெறிமுறைகள் முதலிய 2027 தைப்பூசத் திருவிழா ஏற்பாடுகள் குறித்த கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று வாரியத்தின் அறிக்கை குறிப்பிட்டது.

தகவல்கள் https://thaipusam.sg இணையத்தளம், தைப்பூசம் எஸ்ஜி வாட்ஸ்அப் அலைவரிசை, இந்து அறக்கட்டளை வாரியத்தின் சமூக ஊடகப் பக்கங்கள், சமூக அறிவிப்புகள் போன்ற அதிகாரபூர்வத் தளங்கள் வழியாக வழங்கப்படும்.

இந்த ஆண்டு பிப்ரவரி முதல் தேதி நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் 19,000க்கும் அதிகமானோர் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

குறிப்புச் சொற்கள்