தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானால் தைப்பூசத் திருநாளை ஒரு பொது விடுமுறையாக அறிவிக்கும்படி முயற்சிக்க போவதாகத் தெரிவித்தார் பாட்டாளிக் கட்சியின் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி வேட்பாளராகப் போட்டியிடும் பெரிஸ் வி பரமேஸ்வரி.
அதுமட்டுமின்றி வீவக வீடுகளின் இன ஒருங்கிணைப்புக் கொள்கையால் வீடு விற்கும் இந்தியர்களுக்கு அளிக்கப்படும் நேரம், வாய்ப்புகள் குறைவு. இந்தக் கொள்கையில் மாற்றங்கள் தேவை என்று தெரிவித்த திருவாட்டி பரமேஸ்வரி, அதற்காகப் பாடுபடுவார் என்றார்.
ஈஸ்ட் கோஸ்ட் ஃபெங்ஷான் பகுதியில் ஏப்ரல் 25ஆம் தேதி உலா வந்தபோது செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறினார் பரமேஸ்வரி.
“கண்டிப்பாக நாடாளுமன்றத்தில் மக்கள் குரலாக இருப்போம்,” என்றார்.
காலை 7 மணி மணியிலிருந்து உலா வந்ததில், ஈஸ்ட் கோஸ்ட் மக்கள் தங்களை நல்ல முறையில் அணுகுவதாகத் தெரிவித்தார் பரமேஸ்வரி. ஒரு புதிய அணியாக இருப்பினும், தமிழர்கள் மட்டுமின்றி வேறு இனத்தவர்களும் அவரை அணுகுவதுண்டு என்றார்.
“மக்கள் தங்கள் வாழ்க்கைச் செலவினப் பிரச்சினைகளைப் பற்றி பெரும்பாலும் நம்மிடம் கூறுவதுண்டு. அதைத்தான் நாங்கள் கேட்டுக் கொண்டு வருகிறோம்,” என்றார். ஒரு தமிழ்ப் பெண்ணாகத் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது பற்றி கேட்கப்பட்டதற்கு, “சிங்கப்பூரின் ‘சிங்கப் பெண்ணாக’ போட்டியிடுவது எனக்குப் பெருமையாக உள்ளது,” என்றும் தெரிவித்தார்.