தைப்பூசத் திருநாளைப் பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார் பாட்டாளிக் கட்சியின் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி வேட்பாளர் பெரிஸ் வி பரமேஸ்வரி.
ஈஸ்ட் கோஸ்ட் தொகுதியில் முதன்முறையாக நடைபெற்ற பாட்டாளிக் கட்சிப் பிரசாரக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) உரையாற்றியபோது திருவாட்டி பரமேஸ்வரி இவ்வாறு கூறினார்.
இந்துச் சமூகம் 1968ஆம் ஆண்டில் தீபாவளி அல்லது தைப்பூசம் இரண்டில் ஒன்றைப் பொது விடுமுறையாகத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்ததை அவர் குறிப்பிட்டார்.
அதை மீண்டும் பொது விடுமுறை நாளாக அறிவித்து, சிங்கப்பூரில் மொத்தப் பொது விடுமுறை நாள்களின் எண்ணிக்கையை 12ஆக உயர்த்த வேண்டும் என்றார் அவர்.
உணவங்காடிகளிலும் காப்பிக் கடைகளிலும் உணவின் விலை மலிவாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் தமது உரையில் அவர் வலியுறுத்தினார்.
லாப நோக்குடன் இயங்கும் தனியார் காப்பிக் கடைகள், உணவங்காடிகளுக்கு அதிக வாடகை வசூலிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த வாடகை உயர்வால் சிலர் தங்கள் கடைகளை மூட நேரிட்டுள்ளதாகவும், இச்செலவுகள் இறுதியில் நுகர்வோரின் மீதே விழுவதாகவும் திருவாட்டி பரமேஸ்வரி கூறினார்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், அனைத்துத் தனியார் காப்பிக் கடைகளையும் மீண்டும் வாங்க வேண்டும் என்றும் தேசியச் சுற்றுப்புற வாரியம் நேரடியாக உணவங்காடிகளை நிர்வகிக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.
ஒரு குற்றவியல் விசாரணைக்கு ‘டிரேஸ்டுகெதர்’ செயலியின் தரவுகள் பயன்படுத்தப்பட்ட சம்பவம், அடையாள அட்டை எண் கசிவு விவகாரம் போன்ற பெரிய தரவு மீறல்களைத் (data breach) திருவாட்டி பரமேஸ்வரி எடுத்துக்காட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
அரசாங்கத்தின் முரண்பாடான கருத்துப் பரிமாற்றத்தையும் வெளிப்படைத்தன்மை இன்மையையும் அவர் குறைகூறினார்.
“வெளிநாட்டவர்கள் அதிகம் சிங்கப்பூரில் உள்ளனர் என்ற பேச்சு சிங்கப்பூரர்களிடையே உள்ளது. நமது பிள்ளைகள் கட்டுமானத் தளங்களில் ஊழியர்களாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோமா?” என்று அண்மையில் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி மசெக அணியின் பிரசாரக் கூட்டத்தில், மசெக வேட்பாளர் தினேஷ் வாசு தாஸ் கூறியதைத் திருவாட்டி பரமேஸ்வரி தமது உரையில் சுட்டிக்காட்டினார்
“இப்பிரச்சினைகள் ஊழியர்களைப் பற்றியவையோ கட்டுமானத் துறையில் பணிபுரிவோரைப் பற்றியவையோ அல்ல. அவர்கள் நல்ல முயற்சியுடன் நேர்மையாக உழைப்பவர்கள்,” என்று அவர் கூறினார்.
“நேர்மையான உழைப்புக்கு மரியாதை கிடைக்க வேண்டும். குறிப்பாக, உழைப்பாளர் தினம் நெருங்கும் இந்த நேரத்தில்,” என்று திருவாட்டி பரமேஸ்வரி குறிப்பிட்டார்.