தலைமுறைகள் கடந்தும் கமழ்ந்த மணம்

ஸ்ரீ நாராயண மிஷனின் 78வது ஆண்டு விழாவில் முதன்முறையாகச் சுவைகளின் சங்கமம்

தலைமுறைகள் கடந்தும் கமழ்ந்த மணம்

3 mins read
8f139a24-f925-4978-a01b-bcc1eaff9b96
பாட்டி கைவண்ணத்தை உணவுகளில் பரிமாறி மூன்றாம் பரிசை மாமா - மருமகள் இணையான ஜெகந்நாதன், தன்யா சோமன் இருவரும் வென்றனர். - படம்: ஸ்ரீ நாராயண மிஷன்
multi-img1 of 3
Google News Preferred Icon
சுவீடன் பாட்டியின் கைப்பக்குவத்தைச் சிங்கப்பூரில் எடுத்துக்காட்டிய ஆன்டன் ஃபிரெட்ரெக்சன், 26, ஆதிரா பில்லக்கட், 23, அணிக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது.
சுவீடன் பாட்டியின் கைப்பக்குவத்தைச் சிங்கப்பூரில் எடுத்துக்காட்டிய ஆன்டன் ஃபிரெட்ரெக்சன், 26, ஆதிரா பில்லக்கட், 23, அணிக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. - படம்: ஸ்ரீ நாராயண மிஷன்

பரபரப்பான பெருநகர வாழ்க்கையில் பாரம்பரியச் சுவைகளும் குடும்பக் கதைகளும் ஒரே கூரையின்கீழ் சங்கமித்தால் எப்படி இருக்கும்?

அத்தகைய நேசப் பிணைப்பைக் கண்முன் நிறுத்தியது ஸ்ரீ நாராயண மிஷனின் 78வது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘பாட்டியின் சமையல் குறிப்புகள்’ சமையல் போட்டி.

சமையல் கலையைத் தாண்டி குடும்ப உறவுகளையும் உணவுப் பண்பாட்டையும் புதுப்பிக்கும் உணர்வுப்பாலமாக அமைந்த இந்தப் போட்டியில் பங்கேற்ற 12 அணிகளில் மாமா - மருமகள், சுவீடன் நாட்டவருடன் இணைந்த சிங்கப்பூர் இளையர், நீண்டகால நண்பர்கள் என அணிக்கு இருவராகப் போட்டியாளர்கள் களமிறங்கினர். 

உறவுகளின் உன்னதப் பிணைப்பும் அனைத்துலக நட்பும் இழையோட ஐரோப்பிய - ஆசிய மரபுகளின் சுவைகளை அவர்கள் பரிமாறிக்கொண்டனர்.

ஸ்ரீ நாராயண மிஷனின் கொண்டாட்ட வரலாற்றில் இத்தகைய சமையல் போட்டி நடத்தப்படுவது இதுவே முதன்முறை என்று குறிப்பிட்டார் அமைப்பின் துணைக்குழுத் தலைவர் சரளா ராமன், 79.

சமையற்கலை வல்லுநரான திரு பாலசுந்தரம் பிள்ளை (எஸ்.ஆர்.பாலா) உள்ளிட்ட மூவர் போட்டியின் நடுவர்களாகச் செயல்பட்டனர்.

கேரளா, தமிழ்நாடு, பிரான்ஸ், சுவீடன், மலேசியா என உலகின் பல மூலைகளைச் சேர்ந்த முன்னோர்களின் நினைவுகளும், பாரம்பரியச் சுவைகளும் போட்டி நடந்த இடத்தை நிரப்பியிருக்க, ஒவ்வோர் உணவின் பின்னணியிலும் ஒரு பாட்டியின் கதையும், தாத்தா விட்டுச் சென்ற மரபும் இழைந்தோடின.

போட்டி நடைபெற்ற இடத்தில் நறுமணத்துடன் தயாரான உணவுகள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்த, உணவு வகைகளைச் சுவைத்துப் பார்த்து, அதன் பாரம்பரியம் குறித்துக் கேட்டறிந்து நடுவர்கள் மதிப்பெண் வழங்கினர்.

சுவீடனின் பாரம்பரிய மீன் உணவான கிராவ்லாக்ஸ் சாண்ட்விச், ரஷ்ய டூனா சாலட் பிடா பிரெட், தென்கிழக்காசிய இனிப்பு வகைகள், புபுர் சச்சா, ராயல் முகலாய் விருந்து  மாம்பழப் பாயசம், டோஃபு பிரியாணி, கறுப்பரிசிப் பலகாரம், தலசேரி சிக்கன், இளநீர்ப் பாயசம் எனப் போட்டியாளர்கள் பலவகையான உணவைச் சமைத்தனர்.

போட்டியின் முதன்மை நடுவரும் ஆலோசகருமான திரு எஸ்.ஆர். பாலா, ‘‘எத்தனையோ அனைத்துலகச் சமையல் மேடைகளைக் கண்டிருக்கிறேன். ஆனால், இங்கு நடைபெற்ற சமையல் வணிக நோக்கமற்ற, உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்பட்ட மிக நேர்மையான சமையல். ஒவ்வோர் உணவிலும் அன்பும் பாரம்பரியமும் நிறைந்திருக்கிறது,’’ என்றார்.

உங்களின் மறக்க முடியாத பாரம்பரிய உணவு எது என்று கேட்டபோது, காலஞ்சென்ற தம் தந்தையார் சுந்தர் ராஜூ பிள்ளை கவனத்துடன் சமைத்துத் தரும் ரசந்தான் என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

போட்டியில் முதல் பரிசை ரேகா தினேஷ், 48 - கௌரி ராமசந்திரன், 50, இருவரும் வென்றனர். சிங்கப்பூரில் தலசேரியின் பாரம்பரிய உணவை மறுஉருவாக்கம் செய்து படைத்தது தங்களுக்கு மகிழ்ச்சி என்று அவர்கள் கூறினர். 

“உணவால் உறவுகளைக் கட்டிக்காப்பது உளப்பூர்வமானது. இதுவரை பலமுறை சமைத்திருந்தாலும் இப்படிப் பொதுநிகழ்ச்சியில் சமைப்பது இதுவே முதன்முறை. எனினும் பாட்டி காலத்துச் சமையலை, அம்மா அரைத்துக் கொடுத்த மசாலாப் பொருள்களைக் கொண்டு நாங்கள் சமைத்தது விவரிக்க முடியாத இன்பம்,’’ என்றனர் அவர்கள்.

போட்டியின்  இரண்டாம் பரிசு, சுவீடன் பாட்டியின் கைப்பக்குவத்தைச் சிங்கப்பூரில் சமைத்துக்காட்டிய  ஆன்டன் ஃபிரெட்ரெக்சன் 26 - ஆதிரா பில்லக்கட், 23, அணிக்குக் கிடைத்தது. மூன்றாம் பரிசை மாமா - மருமகள் இணையான ஜெகந்நாதன், 50 - தன்யா சோமன், 35, வென்றனர்.

“வீட்டின்  உணவு மேசையை நலம் மிளிர அழகாக்கிய பாட்டி இப்போது இல்லை. ஆயினும், அவர் சமைத்துக் கொடுத்த உணவின் சுவை நாவில் இன்றும் இருக்கிறது,’’ என்றார் திரு ஜெகந்நாதன்.

நிகழ்ச்சி பலருக்கும் பிடித்திருந்ததைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது என்ற திருவாட்டி சரளா, “ஒவ்வோர் ஆண்டும் வழக்கமான முறைகளில் ஆண்டுவிழாவைக் கொண்டாடுவதைவிட, இவ்வாண்டு உறுப்பினர்களை ஒன்றுசேர்க்கும் விதமாக மிகவும் அர்த்தமுள்ளதாகவும், இதயத்திற்கு நெருக்கமானதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இச்சமையல் போட்டியைத் தேர்ந்தெடுத்தோம். 

‘‘போட்டி நடைபெற்ற இடம் முழுவதும் சமையல் மணத்தைவிட பாசமும் நெகிழ்ச்சியும் அதிகம் நிறைந்திருந்தது. இத்தகைய நிகழ்ச்சிகள் தலைமுறை இடைவெளியைக் குறைத்து, பரம்பரைச் செல்வங்களான சமையல் மரபுகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்ல பேருதவியாக இருக்கின்றன,’’ என்றார். 

குறிப்புச் சொற்கள்
மூத்தோர்சமையல் கலைபோட்டிவெற்றி