கேலாங் சிராய் கலாசார சுற்றுவட்டத்தைப் பொலிவூட்டுவதற்கான நிலம் திருத்தும் நிகழ்வில் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் கலந்துகொண்டார்.
அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக கடந்த வியாழக்கிழமை அறிவித்த திரு தர்மன், நேற்றைய நிகழ்வின்போது மலாய் பாடகர், பாடலாசிரியர், நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட பி. ராம்லிக்கு புகழாரம் சூட்டினார்.
1973ஆம் ஆண்டு மறைந்த திரு ராம்லியின் நினைவுகளையும் படைப்புகளையும் எதிர்காலத் தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் மக்கள் ஆர்வமாக இருந்ததை தாம் உணர்ந்ததாக கடந்த ஏப்ரல் மாதம் திரு தர்மன் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
கேலாங் சிராய் பொற்காலத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து நேற்று பேசிய திரு தர்மன், சிங்கப்பூரை உருவாக்கிய பல வரலாறுகளில் கேலாங் சிராய்க்கு முக்கியப் பங்கு உண்டு என்றார்.
மேலும், சிங்கப்பூரின் பன்முகக் கலாசாரத்தின் நுண்ணிய வடிவம் இந்தப் பகுதி என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த வட்டாரத்தை பொலிவூட்டுவதற்கான பணிகள் 2024 மூன்றாம் காலாண்டில் நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேலாங் சிராய் சந்தை, ஜூ சியாட் வணிக வளாகம் ஆகியவற்றுக்கான புதுப்பிப்புப் பணிகளோடு கேலாங் சிராய் சந்தை-டிரைஸ்டார் இன் கட்டட முனையில் அலங்கார வளைவுக்கான கட்டுமானப் பணிகளும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

