அதிபர் தேர்தலில் போட்டி இருக்கும் என்பதே தம் நம்பிக்கை என்று மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்து இருக்கிறார்.
வருகின்ற அதிபர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடப்போவதாக திரு தர்மன் அறிவித்து இருக்கிறார்.
ஜூரோங் டவுனில் ஆக்டிவ்எஸ்ஜி விளையாட்டு கிராம தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அவர், முன்பு பயன்படுத்திய ஒப்பீட்டையே நேற்று மீண்டும் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தில் இப்போது தாம் ஆற்றும் பணி காற்பந்து குழுவில் தற்காப்பு ஆட்டக்காரரைப் போன்ற ஒன்று என்று அவர் வருணித்தார்.
அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் தான் நடுவர் போல செயல்படப் போவதாகவும் திரு தர்மன், 66, கூறினார்.
"அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் நான் அதே அமைச்சரவைக் குழுவில் ஒருவராக இருக்கமாட்டேன்," என்று அவர் தெரிவித்தார்.
அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவது ஏன் என்பதை விளையாட்டு ஒப்பீட்டைப் பயன்படுத்தி விளக்கும்படி ஊடகத்தினர் கேட்டனர்.
ஜூரோங் குழுத்தொகுதியில் திரு தர்மனுடன் குழுவாகச் சேர்ந்து போட்டியிட்டு வெற்றிபெற்ற சக நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலை இனி என்னவாக இருக்கும் என்றும் ஊடகத்தினர் கேட்டனர். அதற்கு அளித்த பதிலில் திரு தர்மன் இவ்வாறு குறிப்பிட்டார்.
"இதுநாள்வரை நான் தற்காப்பு ஆட்டக்காரர் போன்ற பணியையே ஆற்றி வந்ததாக நினைக்கிறேன். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் அதே குழுவில் இருக்கமாட்டேன்," என்றார் அவர். திரு தர்மனின் பேரையும் புகழையும் நினைத்த மாத்திரத்திலேயே அதிபர் தேர்தலில் போட்டியிடாமல் பலரும் விலகிக்கொள்ளக்கூடும் என்று சிலர் ஊகித்து இருக்கிறார்கள்.
இதுபற்றிக் கேட்டபோது தேர்தலில் போட்டியையே தான் விரும்புவதாக திரு தர்மன் கூறினார்.
"என்னைp பொறுத்தவரை, போட்டி என்பது முக்கியமானது. போட்டியில் இருந்து விலகுவது என்னுடைய அணுகுமுறையன்று. இதுவே எப்போதும் எனது வழியாக இருந்து வந்திருக்கிறது," என்றார் அவர்.
அதிபர் தேர்தலில் வென்றால், சிங்கப்பூரர்களின் நலன்களுக்கு உதவும் எனில் சில உயர்நிலைக் குழுக்களில் தொடர்ந்து இடம்பெறப்போவதாகவும் திரு தர்மன் குறிப்பிட்டார்.

