எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கும் திரு தர்மன் சண்முகரத்னம் அதற்கான தகுதிச் சான்றிதழைப் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளார்.
அந்தப் படிவங்கள் திங்கட்கிழமை காலை சமர்ப்பிக்கப்பட்டதாகத் திரு தர்மனுக்கான ஊடகக் குழு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் உறுதிசெய்தது. மேல் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
கடந்த ஜூலை மாதம் முன்னாள் மூத்த அமைச்சரான தர்மன் சண்முகரத்னம், 66, ‘ஒவ்வொருவருக்கும் மரியாதை’ என்ற கருப்பொருளுடன் அதிபராவதற்கான தமது முயற்சியை அதிகாரபூர்வமாகத் தொடங்கினார்.
புதிய காலகட்டத்திற்கு அதிபராக இருப்பதற்கான தொலைநோக்கைக் கோடிகாட்டிய திரு தர்மன், வேட்பாளர்களைத் தங்களின் சாதனைகளைக் கொண்டு மதிப்பிடுமாறு கேட்டுக்கொண்டார். அவர்களின் கடந்தகால இணைப்புகளை வைத்து அவர்களை மதிப்பிடவேண்டாம் என்று அவர் கூறினார்.
மற்ற உத்தேச வேட்பாளர்களும் தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் இங் கோக் சோங், 75, தாம் விண்ணப்பப் படிவங்களை ஆகஸ்ட் 2ஆம் தேதியன்று சமர்ப்பித்ததாக ஊடகங்களிடம் தெரிவித்தார்.
தொழிலதிபர் ஜார்ஜ் கோ, 63, அவரது படிவங்களை ஆகஸ்ட் 4ஆம் தேதி சமர்ப்பித்தார்.
முன்னாள் அதிபர் தேர்தல் வேட்பாளர் டான் கின் லியன் எதிர்வரும் தேர்தலுக்குத் தேவைப்படும் தகுதிச் சான்றிதழுக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருப்பதாகக் கூறினார். ஆனால், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து தாம் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றார் அவர்.