சாங்கி விமான நிலையத்தின் டிரான்சிட் எனும் பயண இடைமாற்றுப் பகுதியில் உள்ள இரண்டு கடைகளில் வாசனைத் திரவியம் உள்ளிட்ட பொருள்களைத் திருடிய அமெரிக்கத் தம்பதிக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பல் மருத்துவரான கப்படியா ஹுசைன் ஜோகரும், 35, பொறியாளரான கப்படியா அமத்துல்லாவும், 30, இணைந்து 750 வெள்ளி மதிப்புள்ள பொருள்களைத் திருடினர்.
இச்சம்பவம் ஜூன் 23ஆம் தேதி மூன்றாவது முனையத்தில் நடந்தது. திருடியபிறகு அவர்கள் இந்தியாவின் மும்பை நகருக்குச் செல்லும் விமானத்தில் ஏறினர்.
விமானம் புறப்படுவதற்கு முன்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
குற்றத்தைத் தம்பதியர் ஒப்புக்கொண்டனர். பல் மருத்துவருக்கு 18 நாள்களும் அவரது மனைவிக்கு 7 நாள்களும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
திருடப்பட்ட பொருள்கள் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டு கடைகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

