சாங்கி விமான நிலையத்தில் உள்ள முனையங்களிலும் டிரான்சிட் பகுதிகளில் உள்ள கடைகளிலும் 5,136 வெள்ளி மதிப்பிலான பொருள்களை இந்திய ஆடவர் திருடியுள்ளார்.
கடந்த மே மாதம் 29ஆம் தேதி 14 கடைகளில் தனது கைவரிசையைக் காட்டிய அந்த ஆடவர், பொருள்களைத் திருடியபிறகு சிங்கப்பூரை விட்டு வெளியேறினார்.
மே 29ஆம் தேதி அந்த இந்திய ஆடவர் மாலை 4.28 மணிவாக்கில் ஜுவல் சாங்கியில் உள்ள ஒரு கடையில் பை ஒன்றைத் திருடியுள்ளார்.
அக்கடையின் ஊழியர் பொருள்களைச் சரிபார்த்தபோது அந்தப் பை, காணவில்லை என்பதை அவர் அறிந்தார். அதன்பின்னர் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
ஆடவர் பொருள்களைத் திருடியது கண்காணிப்பு படக்கருவியில் பதிவானது.
அதன்பின்னர் அவர் யார் என்பது அடையாளம் காணப்பட்டது. இருப்பினும் அந்த நேரத்தில் அவர் சிங்கப்பூரைவிட்டு வெளியேறிவிட்டார்.
இந்நிலையில், ஜூன் 1ஆம் தேதி மீண்டும் சிங்கப்பூருக்குத் திரும்பிய அந்த ஆடவரை விமான நிலைய காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
டிரான்சிட் பயணியாக அவர் சிங்கப்பூருக்குள் வந்தபோது சிக்கிக்கொண்டார். அவரிடம் நடத்தப்பட்ட விரிவான விசாரணையில் அவர் சாங்கி விமான நிலையத்தில் உள்ள பல கடைகளில் திருடியது அம்பலமானது.
தொடர்புடைய செய்திகள்
அந்த ஆடவரிடமிருந்து திருடப்பட்ட பொருள்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
ஆடவரின் கைது குறித்து காவல்துறை அதிகாரிகள் புதன்கிழமை (ஜூலை 23) அறிக்கை வெளியிட்டனர். அதில் ஆடவர் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆடவர் மீதான திருட்டுக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

