இலையுதிர்கால கொண்டாட்டத்தில் பெரிய ‘லேண்டர்ன்’ விளக்குகள் இல்லை

இலையுதிர்கால கொண்டாட்டத்தில் பெரிய ‘லேண்டர்ன்’ விளக்குகள் இல்லை

2 mins read
52a995ec-aa54-4bca-b99a-542c0b4318e5
பெரிய அளவிலான விளக்கு அலங்காரத்துக்குப் பதிலாக மக்களின் ஊர்வலம் சைனாடவுனில் நடைபெறவுள்ளது. - படம்: கிரேத்தா ஆயர் / கிம்செங் சமூக ஃபேஸ்புக்
Google News Preferred Icon

இவ்வாண்டு சீனர்களின் இலையுதிர்காலப் பாரம்பரிய விழாவில் பெரிய அளவிலான ‘லேன்டர்ன்’ எனப்படும் ஒளி விளக்குகள் சைனாடவுன் சாலைகளில் இடம்பெறாது.

அதற்குப் பதிலாக உள்ளூர் மக்கள் அந்த அலங்கார விளக்குகளைக் கரங்களில் ஏந்தியடி பங்கேற்கும் சாலை ஊர்வலம் நடைபெறும் என்று சைனாடவுன் திருவிழா ஏற்பாட்டுக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர்வாழ் சமூகங்கள்மீது அதிக கவனம் செலுத்தும்விதமாக இவ்வாண்டின் கொண்டாட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய ஆண்டுகளில் சைனாடவுனில் உள்ள இயு டொங் சென் ஸ்திரீட், நியூ பிரிட்ஜ் ரோடு ஆகிய சாலைகளில் பெரிய அளவிலான அலங்கார விளக்குகள் வைக்கப்பட்டன.

விழா தொடங்கி 24 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக அதன் வெளிப்புற வடிவமைப்பில் மாற்றம் செய்யப்படுகிறது. விழா 2002ல் தொடங்கப்பட்டபோது பெரிய அளவிலான சாலை அலங்காரங்கள் புதுமையான கொண்டாட்ட உணர்வை வழங்கின.

“பெரிய அளவிலான விளக்கு அலங்காரங்களும் விற்பனைச் சந்தைகளும் லேன்டர்ன் விளக்குகளும் விழாவுக்குப் பாரம்பரியத்தை வழங்கின. இதுவரை 700 நாள்களுக்கும் மேலாக அவை கரையோரப் பூந்தோட்டத்திலும் ஜூரோங் ஏரி பூங்காவிலும் கொண்டாட்ட உணர்வை வெளிப்படுத்தின. ஆகவே உள்ளூர் சமூகத்தின்மீது கவனத்தைச் செலுத்தி மாற்றங்களை அறிமுகப்படுத்தும் வேளை தற்போது வந்துவிட்டது,” என்று ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் பே செங் ஹூ தெரிவித்தார்.

இந்தப் பாரம்பரிய விழாவுக்கு நல்லாதரவு வழங்கிவந்துள்ள வர்த்தகர்கள், விநியோகிப்பாளர்கள், சமூக பங்காளிகள் அனைவருக்கும் ஏற்பாட்டாளர்களின் அறிக்கையில் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

ஒரு புதிய இலையுதிர்கால கொண்டாட்டப் பாரம்பரியத்தை உருவாக்கி கிரேத்தா ஆயர் ஸ்குவேர் பகுதியில் லேண்டர்ன் விளக்கு அலங்காரங்களை அமைக்கத் திட்டமிடுவதாக அவர் குறிப்பிட்டார்.

சாலைகளில் பெரிய அளவிலான விளக்கு அலங்காரங்கள் சீனப் புத்தாண்டு காலத்தில் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.

சமூகங்களை முன்னிலைப்படுத்திய நிகழ்ச்சிகளையும் கொண்டாட்டங்களையும் கிரேத்தா ஆயர்–கிம்செங் அடித்தள அமைப்புகள் இவ்வாண்டு முன்னின்று ஏற்பாடு செய்கின்றன.

குறிப்புச் சொற்கள்