ரேஸ் கோர்ஸ் ரோட்டில் அமைந்துள்ள புதுப்பிக்கப்பட்ட லிட்டில் இந்தியா பேருந்து முனையத்தில் எட்டு ‘பிக்கல்பால்’ விளையாட்டு மைதானங்கள் கட்டப்படும்.
அக்டோபர் 10ஆம் தேதி, ஸ்போர்ட் சிங்கப்பூர் (ஸ்போர்ட்எஸ்ஜி), அரசு கொள்முதல் தளமான ஜீபிஸில், பேருந்து முனையத்தின் சில பகுதிகளை ‘பிக்கல்பால்’ மைதானங்களாக மாற்றுவதற்கான பணிகள் தொடர்பான ஒப்பந்தப்புள்ளிகளுக்கு அழைப்பு விடுத்தது. இதில் தரைக்கு புதிய பூச்சு அமைத்தல், முழு முனையத்தையும் சுற்றி வலைகளைப் பொருத்துதல் ஆகியவை அடங்கும்.
சிங்கப்பூரில் விளையாட்டு நடவடிக்கைகளுக்காக பேருந்து வசதி மறுசீரமைக்கப்படுவது இதுவே முதல் முறை.
தேசிய வளர்ச்சி துணையமைச்சர் ஆல்வின் டான், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) அன்று ஒரு ஃபேஸ்புக் பதிவில், அந்த மைதானங்கள் 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்படும் என்றும், ஸ்போர்ட்எஸ்ஜியின் முன்பதிவு தளமான MyActiveSG+ வழியாக முன்பதிவு செய்யலாம் என்று கூறினார்.
பேருந்து முனையம் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இயங்குவதால், ‘பிக்கல்பால்’ விளையாட்டின் பயன்பாட்டிற்கான முனையத்தை திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை ஸ்போர்ட்ஸ்ஜி, பிக்கல்பால் மைதானமாக மாற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த நடவடிக்கையை விளையாட்டு பயன்பாட்டிற்காக பொது இடங்களை மேம்படுத்துவதற்கான ஒரு ‘புதிய வழி’ என்று விவரித்தார்.

