கட்டாய ஆட்குறைப்பு குறித்த அறிவிப்புக்கான விதிகளைப் பின்பற்றத் தவறும் முதலாளிகள்மீது தற்போதைக்குக் கடுமையான அபராதம் விதிக்க வேண்டிய அவசியமில்லை என மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான தாமதங்கள் நிர்வாகக் குறைபாடுகளாலேயே ஏற்படுகின்றன என்றும் விதிகளைப் பின்பற்றுவோரின் விகிதம் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் (என்டியுசி) உதவித் தலைமைச் செயலாளரும் பைனியர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான பேட்ரிக் டே எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது அமைச்சர் இவ்வாறு பேசினார்.
தவறு செய்யும் முதலாளிகளுக்கு எதிராகக் கடுமையான அபராதம் விதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்குமா எனத் திரு டே கேள்வி எழுப்பினார்.
தற்போதைய விதிகளின்படி, 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள், ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதை அவர்களுக்குத் தெரிவித்த ஐந்து வேலை நாள்களுக்குள் மனிதவள அமைச்சிடம் அதுகுறித்த அறிவிப்புக் கடிதத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பெரும்பாலான முதலாளிகள் அந்த அறிவிப்புக் கடிதங்களைச் சரியான நேரத்தில் சமர்ப்பிப்பதாக டாக்டர் டான் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டில் கட்டாய ஆட்குறைப்பு தொடர்பில் 80 விழுக்காட்டு அறிவிப்புக் கடிதங்கள் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவிற்கு முன்னதாகவே தாக்கல் செய்யப்பட்டன.
2024ஆம் ஆண்டில் அந்த விகிதம் 70 விழுக்காடாக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டில் 77 விழுக்காட்டு ஆட்குறைப்பு அறிவிப்புக் கடிதங்கள் ஊழியரின் கடைசி வேலை நாளுக்குக் குறைந்தது ஏழு நாள்களுக்கு முன்னதாகவே சமர்ப்பிக்கப்பட்டன.
அதே நேரத்தில், 73 விழுக்காட்டு அறிவிப்புக் கடிதங்கள் குறைந்தது இரு வாரங்களுக்கு முன்னதாகவே தாக்கல் செய்யப்பட்டன.
காலக்கெடுவைத் தவறவிட்ட முதலாளிகளுக்கு எச்சரிக்கைக் கடிதங்கள் வழங்கப்பட்டன என்றும் எச்சரிக்கைக்குப் பிறகு பெரும்பாலோர் விதிகளைப் பின்பற்றியுள்ளனர் என்றும் திரு டான் கூறினார்.
“விதிகளைப் பின்பற்றுவோரின் விகிதம் அதிகமாக உள்ளது. அதனால், அபராதத்தை உயர்த்த வேண்டிய அவசியம் தற்போதைக்கு இருப்பதாகத் தெரியவில்லை,” என்றார் அவர்.

