பன்றி இறைச்சி, கடலுணவு, காய்கறி விலையில் மாற்றமில்லை

சீனப் புத்தாண்டை முன்னிட்டு ஃபேர்பிரைஸ் அறிவிப்பு

பன்றி இறைச்சி, கடலுணவு, காய்கறி விலையில் மாற்றமில்லை

2 mins read
a82a7d0d-3248-4ca1-b423-a1027c96711f
ஜனவரி 29 முதல் மார்ச் 3ஆம் தேதி வரை தீவு முழுவதுமுள்ள 160 ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் குளிரூட்டப்பட்ட பன்றி இறைச்சி, குறிப்பிட்ட கடலுணவு வகைகள், காய்கறிகளுக்கு விலையில் மாற்றமிருக்காது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சீனப் புத்தாண்டை முன்னிட்டு, குடும்பங்கள் பண்டிகைக்காலச் செலவினத்தைச் சமாளிக்க உதவும் நோக்கில் ஃபேர்பிரைஸ் குழுமம் சில உணவுப் பொருள்களின் விலையில் மாற்றம் இருக்காது என்று அறிவித்துள்ளது.

ஜனவரி 29 முதல் மார்ச் 3ஆம் தேதி வரை தீவு முழுவதுமுள்ள 160 ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் குளிரூட்டப்பட்ட பன்றி இறைச்சி, குறிப்பிட்ட கடலுணவு வகைகள், காய்கறிகளின் விலையில் மாற்றமிருக்காது.

அதே காலகட்டத்தில் குறிப்பிட்ட சில காய்கறிகளுக்குத் தள்ளுபடியும் வழங்கப்படும்.

ஆஸ்திரேலியா, மலேசியாவிலிருந்து இறக்குமதியாகும் புதிதான பன்றி இறைச்சிக்கும் விலையில் மாற்றம் இல்லை.

பண்டிக்கைக்காலத்தில் போதிய அளவில் பன்றி இறைச்சி கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கில், பிப்ரவரி மாதத்தில் மலேசியாவிலிருந்து உயிருள்ள பன்றிகளை 20 விழுக்காடு அதிகமாக இறக்குமதி செய்யவிருப்பதாகக் குழுமம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

சிங்கப்பூரில் கோழி இறைச்சிக்கு அடுத்தபடியாக அதிகம் உட்கொள்ளப்படும் புரதச் சத்துள்ள உணவாகப் பன்றி இறைச்சி விளங்குகிறது என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறுகிறது.

‘போம்ஃபிரெட்’, ‘ரெட் குரூப்பர்’, வெள்ளை இறால் போன்ற சில வகைக் கடலுணவுகள், பன்றி இறைச்சி வகைகள், சில வகைக் காளான்கள், காய்கறிகள் போன்றவை ஈரச்சந்தைகளைவிடக் குறைவான விலையில் ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் கிடைப்பதைக் கவனிப்பாளர்கள் சுட்டினர்.

சீனப் புத்தாண்டுக் காலகட்டத்தில் பண்டிகைக்கால உணவுப் பொருள்கள் கட்டுப்படியான விலையில் கிடைப்பதை உறுதிசெய்வது ஃபேர்பிரைஸ் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகளின் நோக்கம்.

குடும்பத்தினர் ஒன்றுகூடி, நேரம் செலவிடும் சீனப் புத்தாண்டு, சிங்கப்பூரர்கள் பலருக்கும் மிக முக்கியமானது என்பதை அறிந்திருப்பதாகக் கூறிய ஃபேர்பிரைஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விபுல் சாவ்லா, வாடிக்கையாளர்களின் கொண்டாட்டங்களுக்கு மேலும் சிறப்பு சேர்க்க ஆன அனைத்தையும் தாங்கள் செய்ய விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

சீன நாள்காட்டியின்படி குதிரை ஆண்டு, பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்குகிறது.

குறிப்புச் சொற்கள்