தவறான தகவல்களை பிரசாரம் செய்வதற்குச் சாத்தியமான இணையத்தளங்களைத் தடுக்க வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று உள்துறை அமைச்சு தெரிவித்து உள்ளது.
சிங்கப்பூரர்கள் குறைவான வெளிப்பாடுகளைத் தெரிவித்தாலும்கூட அதுபோன்ற இணையத்தளங்களை அதிகாரிகள் தடுப்பார்கள் என்று உள்துறை துணை அமைச்சர் சுன் சூவெலிங் நாடாளுமன்றத்தில் கூறினார்.
நம்பகத்தன்மையற்ற இணையத்தளங்களைத் தடை செய்வது தொடர்பாக இயோ சூ காங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் யிப் ஹான் வெங் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
அவ்வாறு தடை செய்வதற்கு உள்துறை அமைச்சு வரம்பு எதனையும் வகுக்கவில்லை என்றார் திருவாட்டி சுன்.
உள்துறை அமைச்சும் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் (IMDA) அக்டோபர் 22ஆம் தேதி 10 போலி இணையத்தளங்களைத் தடை செய்ததைத் தொடர்ந்து திரு யிப் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தார்.
அத்தகைய இணையத்தளங்கள் மூலம் சிங்கப்பூருக்கு எதிரான தகவல்களை வெளிநாட்டினர் பரப்பக்கூடிய சாத்தியம் இருப்பதாக திருவாட்டி சுன் தமது பதிலில் குறிப்பிட்டார்.
“தடை செய்வதற்குரிய இணையத்தளங்களில் பெரும்பாலானவை நம்பகத்தன்மையற்ற உலக செய்தித் தளங்களின் கட்டமைப்புடன் தொடர்புடையவை.
“மற்ற நாடுகளில் தவறான பிரசாரங்களை அவை நடத்தியதாக அறியப்படுகிறது,” என்று கூறினார் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சருமான திருவாட்டி சுன்.
தொடர்புடைய செய்திகள்
“உள்துறை அமைச்சு கண்டறிந்தவற்றை ஏற்றுக்கொண்ட தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், தவறான பிரசாரங்களை பரப்புவதற்கு முன்னரே, பொதுநலன் கருதி, அத்தகைய இணையத்தளங்களைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்துப் பரிசீலித்தது,” என்றும் அவர் தெரிவித்தார்.
தடை செய்யப்பட்ட 10 இணையத்தளங்களும் சிங்கப்பூரின் இணையத்தளங்களைப் போன்று தோற்றமளித்ததாக உள்துறை அமைச்சும் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் அக்டோபர் 22ஆம் தேதி கூறியிருந்தன.
சில இணையத்தளங்கள் சிங்கப்பூரின் அம்சங்களை உள்ளடக்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாகவும் அவை தெரிவித்து இருந்தன.

