சட்டமும் வர்த்தகமும் இன்றி அமைதியும் செழிப்பும் இல்லை: முரளி

சட்டமும் வர்த்தகமும் இன்றி அமைதியும் செழிப்பும் இல்லை: முரளி

2 mins read
184ff518-3cd7-4d36-9639-b5cb8e27792b
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபை ஏற்பாடு செய்த கலந்துரையாடலில்  சட்ட, போக்குவரத்து மூத்த துணையமைச்சர் முரளி பிள்ளை பேசினார். - படம்: சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபை

நாட்டில் உள்ள சட்ட திட்டங்கள் நிலையான, உறுதியான சமூகத்தைக் கட்டமைக்க உதவும் என்று சட்ட, போக்குவரத்து மூத்த துணையமைச்சர் முரளி பிள்ளை கூறியுள்ளார். அதன் மூலம் முதலீடு செய்யவும், விரிவாக்கவும் செய்யவும், புத்தாக்கத்தை நிலைநிறுத்தவும் வர்த்தகங்களுக்கு நம்பிக்கை பிறக்கும் என்றார் அவர்.

“நிச்சயமற்ற உலகச் சூழலில் பல வாய்ப்புகள் உள்ளன. புதிய பாலங்களைக் கட்டும் அதேவேளை ஏற்கெனவே உருவாக்கப்பட்டவற்றை விரிவுபடுத்தவேண்டும்,” என்றார் திரு முரளி.

சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபை திங்கட்கிழமை (பிப்ரவரி 2) ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் திரு முரளி பேசினார். அதில், வர்த்தகத் தலைவர்கள், நிபுணர்கள், சமூகத் தலைவர்கள் என 100க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

தற்போதைய சூழலில் புவிசார் அரசியல் பதற்றங்கள் அதிகரித்துள்ளன. வரிகள் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தி வல்லரசுகள் அவற்றின் விருப்பங்களை நிலைநாட்ட முற்படுகின்றன என்று திரு முரளி சுட்டினார்.

சட்டத்தின் ஆட்சியில் உள்ள கட்டமைப்பு வளர்ச்சி, புத்தாக்கம் ஆகியவற்றுக்கான நிச்சயத்தைத் தரும் என்ற திரு முரளி, அடுத்த தலைமுறைக்கு வர்த்தகத்தை ஒப்படைப்பதற்கான நம்பிக்கையையும் கொடுக்கிறது என்றார்.

சட்டபூர்வ கட்டமைப்புகள் மூலமே பாதுகாப்பான வர்த்தகச் சூழலையும் நிலையான சமூகத்தையும் அமைக்க முடியும் என்று திரு முரளி வலியுறுத்தினார்.

2026ஆம் ஆண்டு சிங்கப்பூரின் சட்ட வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் என்ற அவர், நாட்டின் நவீன சட்டக் கட்டமைப்பு இவ்வாண்டு 200ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதாகக் குறிப்பிட்டார்.

வர்த்தக இலக்குகள் மூலம் நம்பகமான பங்காளியாக வர்த்தகங்களுக்கு தன்னை முன்னிறுத்தி செயல்படும் சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபை, விரிவான பொருளியலையும் சமூகத்தையும் வலுப்படுத்த பெரிய அளவில் பங்களித்துள்ளதாகவும் திரு முரளி பாராட்டினார்.

2022ஆம் ஆண்டு 477ல் இருந்த தொழிற்சபையின் உறுப்பினர் எண்ணிக்கை கடந்த ஆண்டு 656 ஆக உயர்ந்துள்ளதை அவர் சுட்டினார்.

இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டண முறையுடன் சிங்கப்பூர் பேநவ் கட்டமைப்பை இணைத்ததன் மூலம் அத்தகைய பங்காளித்துவ முயற்சிகள் நல்ல பலன் அளித்துள்ளதாகத் திரு முரளி குறிப்பிட்டார்.

உறுதியான, துடிப்புமிக்க வர்த்தகச் சமூகம் இல்லாமல் சிங்கப்பூரில் மட்டுமல்ல, உலகில் எந்தவொரு நாட்டிலும் அமைதியும் செழிப்பும் இருக்காது என்று திரு முரளி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்