சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA), இந்தோனீசியாவில் இருந்து இங்கு இறக்குமதி செய்யப்பட்ட கடல் உணவு வகைகளை சோதனை செய்ததில் அவற்றில் கதிரியக்க மாசுபாடு காணப்படவில்லை என்று அக்டோபர் 4 (சனிக்கிழமை) உறுதிசெய்துள்ளது.
இந்தோனீசியாவின் ஜகார்த்தாவில் இயங்கும் ஒரு தொழில்பேட்டைப் பகுதியில் இருந்து அமெரிக்காவுக்கு ஆகஸ்ட் மாதம் இறக்குமதியான இறால் வகையில் கதிரியக்க மாசுபாடு கண்டறியப்பட்டது. இந்தோனீசிய அதிகாரிகள் அங்கு சோதனையிட்டதில் அப்பகுதியில் கதிரியக்கம் அதிக அளவில் காணப்பட்டது.
கேசியம் 137 (caesium-137) என்று அடையாளம் காணப்பட்ட அந்த மாசுபாடு அணுவாயுத தயாரிப்பில் பயன்படும் இயுரேனியத்தில் இருந்து உருவாகக் கூடிய ஒருவகை கழிவுப் பொருளாகும்.
அமெரிக்க உணவு மற்றும் மருத்துவத் துறை (USFDA), 2025 அக்டோபர் 31ம் தேதி முதல் இந்தோனீசியாவின் சில பகுதிகளில் இருந்து இறக்குமதியாகும் இறால், மசால் போன்றவைகளுக்கு கட்டாய உரிமங்களை அமலாக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் பட்டியலிடப்பட்ட இந்தோனீசிய நிறுவனங்கள் மூன்றாம் தரப்பினரிடம் கதிரியக்க கட்டுப்பாட்டை உறுதிசெய்யவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் மாதம் இறக்குமதியான கிராம்பு வகையிலும் அதே மாசு இருந்ததை அமெரிக்கா சுட்டிக்காட்டியது.
இதன் அடிப்படையில் சிங்கப்பூர் உணவு அமைப்பு இந்தோனீசிய கடல் உணவுகளை பற்பல சோதனைகளுக்கு உட்படுத்தியது. இதுவரையில் எவ்வித மாசும் அவற்றில் இல்லை என்று ஊடகங்களின் கேள்விகளுக்கு அமைப்பு பதில் அளித்தது. அவ்வாறு பாதிப்படைந்த பொருள்கள் இறக்குமதியானதாக அதன் பதிவுகளில் இல்லை எனவும் சிங்கப்பூர் உணவு அமைப்பு உறுதியளித்தது.
மனித செயல்பாட்டினால் அவ்வகை கதிரியக்க மாசுகள் உணவுகளில் கலந்துவிடுகின்றன. தொழில்துறை நடவடிக்கைகளால் விளையும் சுற்றுப்புற மாசுபாடு, முறையற்ற அணுக்கழிவு அகற்றல் போன்றவற்றால் அது ஏற்படுகின்றது எனவும் அமைப்பு விளக்கியது.
குறிப்பாக கதிரியக்க மாசு நடந்துள்ள இடங்களில் இருந்து இறக்குமதியாகி சில்லறையில் விற்பனையாகும் உணவுகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய, அமைப்பு அடிக்கடி சோதனை செய்துவருகிறது.
தொடர்புடைய செய்திகள்
“சிங்கப்பூரில் விற்பனையாகும் உணவுகளில் கேசியம் 137 மாசுபடு இருக்காது” என்று சிங்கப்பூர் உணவு அமைப்பின் பேச்சாளர் கூறினார்.