தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துணை நாயகர் பொறுப்பில் பாரபட்சமே இருக்கக்கூடாது: திரு சியே யாவ் சுவென்

2 mins read
5bf32519-e9cf-47e1-8a21-a622a12cb377
நாடாளுமன்றத் துணை நாயகராக நியமிக்கப்பட்டது சிங்கப்பூரின் புதுப்பிக்கப்பட்ட சட்டமன்றத்தைப் பிரதிபலிப்பதாகக் கூறினார் திரு சியே யாவ் சுவென். - கோப்புப் படம்

நாடாளுமன்றத் துணை நாயகராக நியமிக்கப்பட்டது சிங்கப்பூரின் புதுப்பிக்கப்பட்ட சட்டமன்றத்தைப் பிரதிபலிப்பதாகக் கருதுகிறார் 40 வயது திரு சியே யாவ் சுவென்.

இரண்டாம் தவணைக் கால நாடாளுமன்ற உறுப்பினரான அவர், ‘’இந்தத் தவணைக் கால நாடாளுமன்றம் நல்ல சமத்துவத்தை வெளிப்படுத்துகிறது. புதிய கண்ணோட்டங்களுடன் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனுபவத்தையும் காண முடிகிறது,” என்று திரு சியே சொன்னார்.

2023ஆம் ஆண்டு நாடாளுமன்ற நாயகராக தெரிவுசெய்யப்பட்ட திரு சியா கியென் பெங், 2020ஆம் ஆண்டிலிருந்து துணை நாயகராக இருக்கும் திரு கிறிஸ்டஃபர் டிசூசா ஆகியோருடன் திரு சியே இணைந்து பணியாற்றுவார்.

திரு சியாவும் திரு டிசூசாவும் பழுத்த அனுபவமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள். 2006ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்குள் கால் எடுத்த வைத்த அவர்கள் ஏறக்குறைய 20 ஆண்டு அனுபவமுள்ளவர்கள்.

2020ஆம் ஆண்டு அரசியலில் சேர்ந்த திரு சியே, ‘’நாடாளுமன்றம் எப்போது காலத்துக்கு ஏற்ப இருக்கவேண்டும். அது சமூகத்தை இன்னும் ஆழமாக வெளிப்படுத்தும் நிலையில் இருக்கவேண்டும். நமது சமூகமும் தொடர்ந்து உருமாறிவருகிறது,’’ என்று குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத் துணை நாயகர்கள், மன்ற நாயகருடன் இணைந்து அவையைப் பார்த்துக்கொள்வர். மன்ற நாயகர் இல்லாத சமயங்களில் துணை நாயகர்கள் அமர்வுக்குத் தலைமைத் தாங்குவர்.

“மக்கள் செயல் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் துணை நாயகருக்கான இருக்கையில் அமரும்போது அதற்குரிய பொறுப்பில்தான் கவனம் செலுத்துவேன்,” என்று திரு சியே கூறினார்.

துணை நாயகர் பொறுப்புக்கான அடிப்படை நிபந்தனையில் சிறிதேனும் பாரபட்சம் இருக்கக்கூடாது என்று கூறிய திரு சியே, நாடாளுமன்ற அமர்வுகளின்போது நியாயமாகவும் சமமான முறையிலும் நடந்துகொள்ளவேண்டும் என்று தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
துணைநாடாளுமன்றம்நாடாளுமன்ற உறுப்பினர்