ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் வாங்கப்பட்ட சால்மன் ரக மீனில் காணப்பட்ட புழு போன்ற பொருள் மீனின் நரம்பு என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஃபேர்பிரைஸ் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) தெரிவித்துள்ளது.
இம்மாதம் 12ஆம் தேதி பிடோக் நார்த் பேரங்காடியில் கழிவு விலையில் சால்மனை வாங்கிய வாடிக்கையாளர் பொட்டலத்தில் புழு இருந்ததாக ஃபேர்பிரைஸிடம் புகார் அளித்தார்.
அதையடுத்து தீவிர பரிசோதனைகளை நடத்தியதாக ஃபேர்பிரைஸ் குழுமம் குறிப்பிட்டது.
“வாடிக்கையாளரிடம் எஞ்சியிருந்த சால்மன் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. நீர்மருத்துவ நிபுணரும் ஒட்டுண்ணி மருத்துவரும் வாடிக்கையாளர் அனுப்பிய புகைப்படத்தை ஆராய்ந்தனர். பரிசோதனை முடிவுகளும் நிபுணர்களின் ஆய்வும் சால்மன் பொட்டலத்தில் இருந்தது புழு அல்ல மீனின் நரம்பு என்பது உறுதியானது,” என்று ஃபேர்பிரைஸ் சொன்னது.
ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் விற்கப்படும் அனைத்து உணவுப் பொருள்களும் சரியாகக் கையாளப்பட்டு காலவதியாவதற்குமுன் சமைக்கப்பட்டால் உண்பதற்குப் பாதுகாப்பானவை. உணவுப் பாதுகாப்புக்கும் தரத்துக்கும் தொடர்ந்து அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும் அது குறிப்பிட்டது.
சால்மனில் உள்ள நரம்புகள் சில நேரங்களில் மெல்லியதாகவும் பளபளப்பாகவும் வெள்ளை நிறத்தில் தோன்றுவது வழக்கம் என்று நிபுணர்கள் கூறினர்.