தூரத்திலிருந்து பார்க்கும்போது, பல்நோக்கு வாகனம் ஒன்று, காவல்துறை ரோந்து வாகனம் அல்லது ஆம்புலன்ஸ் என்று எளிதில் தவறாக நினைக்கப்படுகிறது. ஆனால் அருகிலிருந்து பார்க்கும்போது, அந்த வாகனத்தில் உள்ள வார்த்தை ‘பொலைட்’, ‘போலிஸ்’ அல்ல என்பதை அதைப் பார்ப்பவர் உணர்வார்.
இந்த வாகனத்தில் அச்சிடப்பட்ட கியூஆர் குறியீட்டை வருடியவுடன், ஓர் ஐஸ்கிரீம் கடையின் இணையப்பக்கத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுகிறீர்கள்.
வாகனமோட்டிகளின் கண்களில் பட்ட இந்த வாகனத்தின் புகைப்படங்கள், ஜூன் 15ஆம் தேதி எஸ்ஜி ரோடு விஜிலான்டே ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
இந்த வாகனம் குறித்து இணையவாசிகள் மாறுபட்ட கருத்துகளைப் பதிவு செய்தனர். இது ஒரு நல்ல யோசனை என்று சிலர் பதிவிட்டாலும், இது காவல்துறை கார்போல இருப்பதால் மற்றவர்களை வேண்டுமென்றே தவறாக வழிநடத்துவதாக வேறு சிலர் கருதினர்.
இந்நிலையில், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய அந்த வாகனத்தின் உரிமையாளர் கோ யோங் வெய், 32, தமது டொயோட்டா அல்ஃபார்ட் வாகனத்தில் மே மாதம் இந்த ஒட்டுச்சீட்டை ஒட்டியதாகத் தெரிவித்தார். அப்போதிலிருந்து சாலையில் வாகனமோட்டிகள் தமக்கு வழிவிடுவதாக அவர் சொன்னார்.
“சிங்கப்பூரில் குறிப்பாக உச்ச நேரங்களில், வாகனம் ஓட்டும் கலாசாரம் கனிவன்பு உடையதாக இல்லை என்பதை ஒரு வாகனமோட்டியாகவும் மோட்டார்சைக்கிளோட்டியாகவும் நான் கவனித்து வந்துள்ளேன்.
“நான் கவனிக்கப்பட விரும்புகிறேன், மக்கள் என்னைப் பார்த்து விபத்தைத் தவிர்க்க மெதுவாகச் செல்ல வேண்டும் என விரும்புகிறேன்,” என்று தொழிலதிபரான திரு கோ கூறினார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் 10க்கும் மேற்பட்ட கார், மோட்டார்சைக்கிள் விபத்துகளில் தாம் சம்பந்தப்பட்டதாகச் சொன்ன அவர், மேலும் ஒரு விபத்தைத் தவிர்க்க இந்த ஓட்டுச்சீட்டுகளை வாகனத்தில் ஒட்டியதாகக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“இப்போது நான் மேலும் பாதுகாப்பாக இருப்பதை உணர்கிறேன். வாகனம் ஓட்ட இப்போது எளிதாக உள்ளது,” என்றார் அவர்.
தமது ஐஸ்கிரீம் கடையின் இணையப்பக்கத்திற்கு மக்களை இட்டுச்செல்ல ஒரு கியூஆர் குறியீடு வாகனத்தில் சேர்க்கப்பட்டதாகக் கூறிய திரு கோ, ஒரு நாளில் சுமார் 20 முறை அது வருடப்படுவதாகச் சொன்னார்.
இந்நிலையில், ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த காவல்துறை, இந்த விவகாரம் குறித்து தன்னிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் தொடர்பில் விசாரணை தொடர்வதாகவும் தெரிவித்தது.