மூன்று கதவுகளைக் கொண்ட 500க்கும் மேற்பட்ட பொதுப் பேருந்துகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், பேருந்து நிறுத்தங்களை மாற்றியமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பயணிகள் பேருந்துகளில் ஏறுவதையும் இறங்குவதையும் சீராக்குவது இதன் நோக்கம் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், சில இடங்களில் நிலவும் இடப்பற்றாக்குறைகாரணமாக, எல்லாப் பேருந்து நிறுத்தங்களையும் மாற்றியமைக்க முடியாது என்றது ஆணையம்.
“இந்தக் குறிப்பிட்ட பேருந்து நிறுத்தங்களில் மூன்றாவது கதவு தொடர்ந்து மூடப்பட்டிருக்கலாம். பயணிகளின் பாதுகாப்பைக் கருதி, இரண்டாவது கதவைப் பயன்படுத்தி இறங்குமாறு பேருந்து ஓட்டுநர்கள் பயணிகளுக்கு அறிவுறுத்துவார்கள்,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் கேள்விகளுக்கு அளித்த பதிலில் ஆணையம் தெரிவித்தது.
மூன்றாவது கதவு வழியாக இறங்குவதற்குப் பாதுகாப்பற்றதாக இருக்கும் அடையாளம் காணப்படும் பேருந்து நிறுத்தங்களின் எண்ணிக்கையை ஆணையம் வெளியிடவில்லை. சீரமைப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்படும் பேருந்து நிறுத்தங்களின் எண்ணிக்கையையும் அது குறிப்பிடவில்லை
பேருந்து நிறுத்தங்கள் சிலவற்றில் மூன்றாவது கதவு, தளமேடையில் திறக்கப்படுவதற்குப் பதிலாக, நேரடியாகச் சாலையில் திறக்கப்படும் என்று ஆணையம் விளக்கியது.
தெலுக் குராவ் ரோட்டிலுள்ள ஈஸ்ட் கோஸ்ட் அப்பார்ட்மெண்ட்ஸ் (East Coast Apartments) அடுக்குமாடி வீடுகளுக்கு அருகிலுள்ள நிறுத்தம் உட்பட இத்தகைய பேருந்து நிறுத்தங்கள், அளவில் சிறியதாக உள்ளன.
அதே சாலையில் செயிண்ட் பேட்ரிக்ஸ் ரோட்டிற்கு (Saint Patrick’s Road) முன்னதாக உள்ள மற்றொரு நிறுத்தத்தில், மூன்றாவது கதவு வழியாக இறங்கும் பயணிகள் கான்கிரீட் மேடைக்குப் பதிலாகப் புல்வெளியில் கால் வைக்க நேரிடலாம்.
தற்போது சேவையிலுள்ள பொதுப் பேருந்துகளில், 440 ஒற்றை அடுக்கு மற்றும் 100 ஈரடுக்கு என மொத்தம் 540 மூன்று கதவுப் பேருந்துகள் உள்ளன.


