என்விடியா சில்லு மோசடி தொடர்பில் நான்காவது நபர்மீது குற்றச்சாட்டு

என்விடியா சில்லு மோசடி தொடர்பில் நான்காவது நபர்மீது குற்றச்சாட்டு

2 mins read
16870707-e771-4800-b98a-23bed7d03791
மேகக்கணிமைச் சேவைகளை வழங்கும் எபிரியா நிறுவனத்தின் 51 வயது தலைமை நிதி அதிகாரி ஜென்னி லிம்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில், அதிநவீன என்விடியா (Nvidia) சில்லுகளின் பயன்பாடு தொடர்பான வழக்கில் நான்காவது நிர்வாகிமீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேகக்கணிமைச் சேவைகளை வழங்கும் எபிரியா (Aperia) நிறுவனத்தின் 51 வயது தலைமை நிதி அதிகாரி ஜென்னி லிம்மீது வியாழக்கிழமை (ஏப்ரல் 2) மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

எபிரியா இன்டர்நேஷனல் என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் ஒரே பங்குதாரர் ஏபிரியா மேகக்கணிமைச் சேவைகள் நிறுவனம்.

என்விடியா சில்லுகள் தொடர்பான மோசடியை 50 வயது எலன் வெய் சாவ்லுன், 41 வயது ஏரன் வூன் குவோ ஜியே ஆகியோருடன் இணைந்து லிம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

வெய், ஏபிரியா மேகக்கணிமைச் சேவைகள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி. வூன் அந்த நிறுவனத்தின் விற்பனைப் பிரிவுத் தலைவர்.

லிம், வெய், வூன் ஆகிய மூன்று நிர்வாகிகளும் இணைந்து டெல் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட கணினிகளை ஏபிரியா இன்டர்நே‌‌ஷனல் நிறுவனத்திடம் மட்டும் செயல்படுத்தும் என்று கூறியதாகத் தெரிகிறது. ஆனால் அந்தக் கணினிகள் பின்னர் மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

அந்தக் கணினிகளில் என்விடியா சில்லுகள் பொருத்தப்பட்டிருக்கலாம் என்று உள்துறை அமைச்சர் கா சண்முகம் கடந்த ஆண்டு மார்ச் 3ஆம் தேதி கூறினார்.

சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் அமெரிக்காவின் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளைமீறி சட்டவிரோதமாக என்விடியா சில்லுகளைச் சீனாவுக்குக் கடத்துவதாக வந்த புகார்களை அடுத்து சிங்கப்பூரில் மொத்தம் 9 பேரை அதிகாரிகள் கைதுசெய்தனர்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சீனச் செயற்கை நுண்ணறிவு நிறுவனம் டீப்சீக் இலவச செயற்கை நுண்ணறிவுக் கருவியை அறிமுகம் செய்தது. அதன் மூலம் அமெரிக்கத் தொழில்நுட்பப் பங்குசந்தையில் கிட்டத்தட்ட $1 டிரில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது.

அதையடுத்து, என்விடியா சில்லுகள் கட்டுப்பாடுகளையும் மீறி ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அமெரிக்கா விசாரணையைத் தொடங்கியது.

குறிப்புச் சொற்கள்