மே 22, 23ஆம் தேதிகளில் தீவு முழுவதும் நடத்தப்பட்ட ரகசிய சங்கங்களை ஒடுக்கும் நடவடிக்கையின்போது, சட்டவிரோத சங்கங்களின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் 21 முதல் 39 வயதுக்குட்பட்ட 13 ஆண்களை சிங்கப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த நடவடிக்கையைக் குற்றப் புலனாய்வுத் துறையின் ரகசிய சங்கங்கள் பிரிவு முன்னின்று நடத்தியது என்றும் அங் மோ கியோ, தங்ளின், ஜூரோங், உட்லண்ட்ஸ் காவல்துறைப் பிரிவுகள் இதற்கு ஆதரவளித்தன என்றும் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தீவு முழுவதும் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, சுமார் 35 பொது பொழுதுபோக்கு மையங்கள், இரவுநேர கேளிக்கை விடுதிகள், உணவு, பானக் கடைகள் ஆகியவற்றில் கிட்டத்தட்ட 100 நபர்கள் சோதனையிடப்பட்டனர்.
13 பேர் மீதும் காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
1966ஆம் ஆண்டின் சங்கங்கள் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட எவருக்கும், தண்டனைத் தீர்ப்பின் பேரில் $10,000 வரை அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
பொதுப் பாதுகாப்பு, அமைதி மற்றும் சமூகத்தின் நல்ல ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு ரகசிய சங்கம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளையும் சற்றும் சகித்துக்கொள்ள மாட்டோம் என்று காவல்துறை கூறியுள்ளது.
“பல்வேறு பொது பொழுதுபோக்கு மற்றும் இரவுநேர கேளிக்கை மையங்கள், மக்கள் கூடும் பிரபலமான இடங்களில் வழக்கமான அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நாங்கள் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றுவோம்,” என்று காவல்துறை மேலும் கூறியது.
ரகசிய சங்கங்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை கூறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ரகசிய சங்கங்களின் நடவடிக்கைகளிலிருந்து பொதுமக்கள் விலகி இருக்குமாறும், அத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பற்றி உடனடியாகக் காவல்துறையிடம் தெரிவிக்குமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

