பண்டைத் தமிழரின் ஆன்மிகத்திற்கும் பண்பாட்டிற்கும் இன்றளவும் சாளரங்களாகத் திகழும் திருமுறைகளைப் பண்ணிசைப் பாட்டுடனும் பாரம்பரியக் கயிலை வாத்தியங்களுடனும் செவிகளுக்குப் பரிமாறச் சிங்கப்பூர்த் திருமுறை மாநாடு முற்பட்டது.
‘திருமுறைகள் ஒலிக்கட்டும்; திருவருள் பெருகட்டும்’ என்ற முழக்கவரியுடன் அந்த மாநாடு இவ்வாண்டு ஜூலை 31, ஆகஸ்ட் 1, 2ஆம் தேதிகளில் நடைபெற்றது.
46வது முறையாக நடைபெற்ற அந்த மாநாடு, சைவ சமயத்தையும் பன்னிரு திருமுறைகளையும் பற்றிச் சமய அன்பர்களுக்கு எடுத்துரைக்க முனைந்தது.
மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவராகப் பேராசிரியர் முனைவர் இராம கருணாநிதி, குழுவின் ஆலோசகராகப் பேராசிரியர் முனைவர் சுப. திண்ணப்பன் ஆகியோர் அதனை வழிநடத்தியதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
அதற்கான சிறப்பு அழைப்பாளராக இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி சரோஜினி பத்மநாதன் வருகையளித்தார்.
மாநாட்டின் பெரும்பாலான அங்கங்கள் டேங்க் ரோட்டிலுள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத்தில் நடைபெற்றன.
பண்பாட்டு நிகழ்ச்சிகளுடன் பக்தி இலக்கிய அறிஞர் அ. கி. வரதராஜன் எழுதிய ‘நால்வர் குறள்மணி மாலை’ என்ற நூல் வெளியீடும் இடம்பெற்றது. சொற்பொழிவாளர் சண்முக செல்வகணபதியின் உரைகள் சிலவும் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) மாலை, சிறார்களுக்கான திருமுறைத் திருவேடம் மற்றும் குழுப் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வண்ணம் தீட்டுதல், கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் நடந்தேறியது.
இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு ஜூரோங் ஈஸ்ட் அருள்மிகு முருகன் ஆலயத்தில் 63 நாயன்மார் குருபூஜை விழா, பக்திப் பெருக்குடன் நடைபெற்றது.
அறுபத்து மூவரின் திருமேனிப் பட ஊர்வலம், திருத்தொண்டத்தொகை ஓதுதல், திரு ல. சுரேஷ்குமார் தலைமையில் சைவ சமயம் குறித்த கேள்வி-பதில் அங்கம் ஆகியவை இடம்பெற்றன. அதன் பின்னர், பிற்பகலில் மகேஸ்வர பூஜையுடன் அன்னதானம் வழங்கப்பட்டது.
மாநாட்டு ஏற்பாட்டுக் குழுத் துணைத்தலைவர் இணைப்பேராசிரியர் முனைவர் ஆ.ரா. சிவகுமாரனின் நன்றியுரையுடனும் திருமுறை ஓதும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்புடனும் மாநாடு நிறைவுற்றது.
பண்ணிசையின் தொடர்ச்சியில் கவனம்
தேவாரப் பதிகங்களைப் பண்ணோடு பாடக்கூடிய பண்டைய மரபு தொடர்ந்து தழைக்க வேண்டும் என்று மாநாட்டின் சிறப்புப் பேச்சாளர் முனைவர் சண்முக செல்வகணபதி தெரிவித்தார்.
“மூவர் பாடிய திருமுறைகளும் தேவாரங்களும் இயற்றப்பட்ட காலத்திலேயே பண்ணோடுதான் பாடப்பட்டன. அவர்கள் பண்ணோடு மட்டுமன்றி, அப்பண்ணுக்குரிய லயத்துடனும் தாளக் கட்டளையுடனுமே பாடினார்கள். அந்தப் பண்டைய மரபை நாம் காப்பாற்ற வேண்டும்,” என்று அவர் கூறினார்.
பண்ணிசை மரபை இன்றைய தலைமுறைக்கு ஓரளவாவது கொண்டுசேர்க்க வேண்டும் எனக் குறிப்பிட்ட முனைவர் செல்வகணபதி, அதே முறையை நாம் முழுமையாக அடைய முடியாவிட்டாலும், ஓரளவிற்காவது நெருங்கிச் சென்று பாடவேண்டும் என்றார்.
இளையர்களை ஈடுபடுத்தும் முயற்சியைப் பாராட்டிய அவர், “பக்தி வழிபாட்டையோ பண்ணிசை வழிபாட்டையோ சிறு வயதிலேயே பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கற்பித்துவிட்டால், அது வாழ்நாள் முழுவதும் துணைநிற்கும்,” என்றார்.
இளையர்வழி தழைக்கும் மரபு
தேவாரம் ஓதுதல் போட்டியில் ஊக்கப் பரிசு பெற்ற கவின் கண்ணப்பன், இத்தகைய போட்டிகள் பக்தி இலக்கியங்களைப் பற்றியும் தமிழ் மொழியைப் பற்றியும் மேன்மேலும் தெரிந்துகொள்வதற்கான ஆர்வத்தை அதிகரித்துள்ளதாகக் கூறினார்.
“இந்தப் போட்டிக்காக நான் மூன்று, நான்கு மாதங்களாகத் தயார் செய்துகொண்டிருந்தேன். எழுத்து வழியிலும் பாடல்கள் வழியிலும் நான் பண்டைத் தமிழரின் வாழ்க்கைமுறையை மேலும் புரிகிறேன்,” என்று அவர் கூறினார்.
தேவாரம் ஓதும் போட்டியில் பங்கேற்றுப் பரிசு பெற்ற மற்றோர் இளையரான 14 வயது மாணவி மணிகண்டன் நித்திலா, இத்தகைய போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படுவதில் தாம் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாகத் தெரிவித்தார்.


