கூட்டுரிமைப் பட்டாக் கழகம் (Strata Titles Board), ‘தாம்சன் வியூ’ கூட்டுரிமை வீடுகளின் ஒட்டுமொத்த விற்பனையை நிறுத்த உத்தரவிட்டுள்ளதாக பிஸ்னஸ் டைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னதாக, $810 மில்லியனுக்கு அந்தக் கூட்டுரிமை வீடுகள் ஒட்டுமொத்த விற்பனையில் வாங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், மார்ச் 19ஆம் தேதி விற்பனை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கழகப் பேச்சாளர் கூறியதாக பிஸ்னஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
ஒட்டுமொத்த விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சி தோல்வியடைந்ததால், அவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
சொத்து மேம்பாட்டுக் குழுமமான ‘யூஓஎல்’, ‘சிங்லேண்ட்’, ‘கேப்பிட்டலேண்ட் டெவலப்மண்ட் (CLD)’ ஆகியவை இணைந்து 2024 நவம்பரில் $810 மில்லியனுக்கு ‘தாம்சன் வியூ’ கூட்டுரிமை வீடுகளை வாங்க ஒப்பந்தம் செய்துகொண்டதாகக் கூறப்பட்டது.
வீட்டு உரிமையாளர்கள் $918 மில்லியன் கோரியிருந்தனர். இதன் தொடர்பில் நடத்தப்பட்ட சமரசப் பேச்சுகள் பலனளிக்கவில்லை.
ஐந்து ஹெக்டர் பரப்பளவிலான அந்தக் கூட்டுரிமை வீட்டு நிலப்பகுதியைச் சதுர அடிக்கு $1,178 என்ற விலைக்கு வாங்க ‘யூஓஎல்’, ‘சிங்லேண்ட்’, ‘சிடிஎல்’ ஆகியவை முயற்சி செய்தன. அங்கு 1,240 வீடுகளைக் கட்டுவது அவற்றின் திட்டம்.
‘தாம்சன் வியூ’வில் தற்போது 200 அடுக்குமாடி வீடுகள், 54 தரைவீடுகள், ஒரு கடை ஆகியவை அமைந்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
உரிமையாளர்களில் சிலர் மறுப்பு தெரிவித்ததால் அந்த விற்பனை ஒப்பந்தம் சிக்கலைச் சந்தித்துள்ளது.
அவர்கள் மறுப்பு தெரிவிப்பதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் பொதுவாக நிதி இழப்பு அல்லது நல்லெண்ண அடிப்படையில் இந்த ஒட்டுமொத்த விற்பனை நடைபெறவில்லை என்று அவர்கள் கருதுவதாகத் தெரிகிறது.
சமரசம் ஏற்படாததால் ஒட்டுமொத்த விற்பனைக்கான குழு, ஒப்புதல் வேண்டி உயர் நீதிமன்றத்திடம் விண்ணப்பித்துள்ளது.
வழக்கு மே 22ஆம் தேதி விசாரணைக்கு வரும்.