அழகுசாதனப் பொருள்களை வாங்கவும் அழகு பராமரிப்புச் சேவைகளுக்கும் முன்பணம் செலுத்திய பலரும் ஏமாறும் நிலை நீடிக்கிறது.
இவ்வாண்டின் முதல் பாதியில் மட்டும் 108,000 வெள்ளியை பயனீட்டாளர்கள் அவ்வாறு இழந்துள்ளனர். கடந்த ஆண்டின் முதல் பாதியோடு ஒப்பிடுகையில், இது கிட்டத்தட்ட 500 விழுக்காடு அதிகம்.
அழகுசாதனப் பொருள்களை வாங்கவும் அழகு பராமரிப்புச் சேவைகளுக்காகவும் பணம் செலுத்திய பின்னர், உறுதியளித்தபடி அவர்களுக்குப் பொருள்கள் அனுப்பப்படவில்லை; சேவைகள் அளிக்கப்படவில்லை.
கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அழகுசாதனத் துறையில் பயனீட்டாளர்கள் $19,000 இழந்ததாகவும் இவ்வாண்டு அதில் 464 விழுக்காடு ஏற்றம் பதிவாகி உள்ளதாகவும் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் (Case) தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் சற்று குறைவான புகார்கள் பதிவான நிலையிலும் ஏமாந்த தொகை அதிகரித்திருப்பதாக அது செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 5) தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
அழகு சாதனப் பொருள் மற்றும் சேவை தொடர்பில் ஏமாற்றப்பட்டதாகக் கடந்த ஆண்டின் முதல் பாதியில் 600 புகார்களும் இவ்வாண்டு அதே காலகட்டத்தில் 558 புகார்களும் பதிவாகி உள்ளன.
பதிவான புகார்களில் 28 விழுக்காடு, வியாபாரத் தந்திரத்தைப் பயன்படுத்தி தவறாக வழிநடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டவை என்றது சங்கம்.
“ஏமாற்றப்பட்ட சம்பவங்களில் பெரும்பாலானவற்றில், அழகு சம்பந்தப்பட்ட அதிக மதிப்புள்ள தொகுப்புகளுக்குப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அதற்காக அவர்களுக்குத் தெளிவற்ற, மிகைப்படுத்தப்பட்ட வாக்குறுதிகள் வழங்கப்பட்டன,” என்று சங்கம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஏமாற்றப்பட்ட ஒரு சம்பவத்தில் மட்டும் $370,000 தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது.
முன்பணம் கொடுத்து ஏமாறும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அழகு சேவைத் துறை கவலைக்குரிய ஒன்றாக நீடிக்கிறது என்று சங்கத்தின் தலைவர் மெல்வின் யோங் தெரிவித்துள்ளார்.