தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விடுமுறைக் காலத்தில் மலேசியா செல்வோர் போக்குவரத்து நெரிசலை எதிர்பார்க்கலாம்

1 mins read
b443f416-a2f6-47a4-847a-5b111f8a93a3
ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு ஜூன் மாதத்தில் போக்குவரத்து நெரிசல் இன்னும் அதிகமாகும் என்று குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்தது. - படம்: பிசினஸ் டைம்ஸ்

ஜூன் மாத பள்ளி விடுமுறையின்போது மலேசியாவுக்கு வாகனங்களில் பயணம் செல்லவிருப்போர் கடுமையான வாகன நெரிசலை எதிர்பார்க்கலாம் என்று குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம் வெள்ளிக்கிழமை (மே 23) தெரிவித்தது.

குறிப்பாக, ஹஜ்ஜுப் பெருநாள் காலத்தில் ஜூன் 6ஆம் தேதியிலிருந்து 9ஆம் வரை உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.

மே 9ஆம் தேதி விசாக தின வாரயிறுதிக்கு முன் வந்த வெள்ளிக்கிழமையில் குடிநுழைவுச் சோதனைச் சாவடிகளைக் கடக்க ஓட்டுநர்கள் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் வரை காத்திருக்க நேர்ந்தது.

மே 8ஆம் தேதியிலிருந்து 13ஆம் தேதி வரை உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளை மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடந்துள்ளதாகச் சொன்ன ஆணையம், மே 9ஆம் தேதி ஆக அதிகமான பயணிகள் அவ்வழியே சென்றனர் என்றும் குறிப்பிட்டிருந்தது.

ஜூன் மாதம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் பயணிகள் மலேசியாவுக்குப் பேருந்துகளில் செல்லும்படி குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம் அறிவுறுத்தியது.

நிலப் போக்குவரத்து ஆணையத்தின் MyTransport.SG செயலியில் பேருந்து நேரங்கள் குறித்த விவரங்களைப் பெறலாம்.

உச்ச நேரங்களில் பயணத்தைத் தொடங்கும் முன் போக்குவரத்து நிலவரத்தைச் சரிபார்க்கும்படி ஆணையம் பயணிகளிடம் அறிவுறுத்துகிறது.

குறிப்புச் சொற்கள்