‘கேபோட்ஸ்’ எனப்படும் போதைப்பொருள் தோய்ந்த மின்சிகரெட்டுகளின் பாதிப்புகள் குறித்து இடருறு இளையர்களுக்கு (youth-at-risk) மனநல ஆலோசகர்கள் எச்சரித்து வருகின்றனர்.
அவற்றால் தங்களின் உடல்நலத்திற்கும் பாதுகாப்பிற்கும் விளையும் தீங்கு குறித்த பற்றிய விழிப்புணர்வு இளையர்களிடையே அதிகரிக்க வேண்டும் என்கிறார் இளையர்நல ஆர்வலர் குழுவான ‘இம்பார்ட்’ நிறுவனத்தின் தலைவர் நரசிம்மன் திவாசிகமணி, 40.
2019ல் தொடங்கிய இக்குழுவில் தற்போது தொண்டூழியர்கள் 226 பேர் இணைந்துள்ளனர்.
‘கேபோட்ஸ்’ மின்சிகரெட்டுகளைப் புழங்கிய இளையர்கள் ஏறத்தாழ 20 பேரைத் தங்கள் குழுவினர் சந்தித்துள்ளதாகத் திரு நரசிம்மன் தெரிவித்தார்.
‘இட்டோமிடேட்’ போன்ற மயக்க மருந்துகளைக் கொண்டுள்ள அந்த மின்சிகரெட்டுகளை நுகர்வோருக்கு லேசான மயக்கநிலை ஏற்படுகிறது.
அதனைப் புழங்கும் இளையர்கள் பலர், 16 வயதுக்கும் மேற்பட்ட பதின்ம வயதினராக இருப்பதாகத் திரு நரசிம்மன் கூறினார்.
“ஓரளவு சம்பாதிக்க முடிந்தவர்களில் சிலர், சாதாரண மின்சிகரெட்டுகளைப் புழங்குவதாக எண்ணுகின்றனர். அவர்களில் பலரும் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறிந்தே செய்கின்றனர்,” என்றும் அவர் சொன்னார்.
ஆயினும், போதைப்பொருள் தோய்ந்த மின்சிகரெட்டுகளால் ஏற்படும் பாதிப்பின் தீவிரத்தை அவர்கள் அறியவில்லை என்றும் திரு நரசிம்மன் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“போதைப்பொருள், புகைபிடித்தல் ஆகியவற்றைக் காட்டிலும் மின்சிகரெட்டுகளின் புழக்கத்தால் ஏற்படும் பாதிப்பு குறைவு எனத் தவறாக எண்ணுகின்றனர். அதனால், போதைப்பொருளுக்கும் சிகரெட்டுக்கும் எதிரான விளம்பரங்கள், அவர்களை மின்சிகரெட்டுகளைக் கைவிடத் தூண்டுவதில்லை,” என்று அவர் கூறினார்.
‘கேபோட்ஸ்’ மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்து எடுத்துரைக்க உண்மைச் சம்பவங்களைச் சித்திரிக்கும் விளம்பரங்கள் தேவை என்கிறார் திரு நரசிம்மன்.
மயக்கமுறச் செய்யும் பொருள்களைப் பயன்படுத்துவோரும் தீய பழக்கங்களுக்கு அடிமையாவோரும் அடிப்படையில் மனத்தளவில் காயமுற்றோர் என்றார் அவர்.
“நண்பர்களால் எளிதில் வசப்படும் தன்மை, வீட்டில் கசப்பான அனுபவங்கள், மனஉறுதி இல்லாமை உள்ளிட்டவையும் அதற்குப் பங்களிக்கின்றன,” என்றும் அவர் சொன்னார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட இளையர்களை மனநலக் கழகத்தில், ‘தீய பழக்கங்களுக்கு அடிமையாவதற்கு எதிரான தேசிய நிர்வாகச் சேவை’க்கு (National Addictions Management Service) அழைத்துச் சென்று அவர்களுக்கு ஆதரவு அளித்துவரும் பணியை ‘இம்பார்ட்’ செய்துவருவதாகத் திரு நரசிம்மன் கூறினார்.