ஐவரில் ஒருவர் தகுதிக்குக் குறைவான வேலைகளைச் செய்கின்றனர்: ஆய்வு

மனிதவள அமைச்சு, என்டியுசி ஆய்வு

ஐவரில் ஒருவர் தகுதிக்குக் குறைவான வேலைகளைச் செய்கின்றனர்: ஆய்வு

2 mins read
09658fec-9b20-4899-ae21-a6ddf6414e55
வேலைக்குத் தேவையானதைவிட கூடுதல் தகுதி கொண்டுள்ள ஊழியர்களில் 10ல் ஒன்பது பேர், விருப்பத்துடனேயே அதனைச் செய்கின்றனர். - கோப்புப் படம்: எஸ்பிஎச்

சிங்கப்பூரில் தகுதிக்குக் குறைவான வேலைகளில் உள்ள ஊழியர்களில் பெரும்பாலோர் விருப்பத்துடனேயே அதனைச் செய்வது ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

வேலைக்குத் தேவையானதைவிடக் கூடுதல் தகுதியுடைய ஊழியர்களில் 10ல் ஒன்பது பேர், தாங்களாகவே முன்வந்து அத்தகைய வேலைகளைச் செய்வதாக மனிதவள அமைச்சின் ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. உள்ளூர் ஊழியரணியில் அந்த விகிதம் 17.7 விழுக்காடு.

ஒருவர் தகுதிக்குக் குறைந்த வேலையைப் பார்க்கும் போக்கு, அதன் தொடர்பில் சிங்கப்பூரில் நிலவும் நிலை ஆகியவை குறித்த இரண்டு ஆய்வுகளின் முடிவுகளை மனிதவள அமைச்சும் தேசியத் தொழிற்சங்க காங்கிரசும் (என்டியுசி) செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) வெளியிட்டன. 

அந்த ஆய்வுகளின்படி, சிங்கப்பூர் ஊழியர்களில் ஐவரில் ஒருவர் தகுதிக்குக் குறைந்த வேலைகளைச் செய்கின்றனர். அவர்களில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டினர் அவற்றை விருப்பத்துடன் செய்வது ஆய்வில் தெரியவந்தது.

சிறந்த வேலை-வாழ்க்கைச் சமநிலை, நீக்குப்போக்கான பணி நேரம், தனிப்பட்ட விருப்பங்கள், விற்பனை சார்ந்த துறைகளில்  கிடைக்கும் அதிக வருமானம் போன்றவற்றின் காரணமாக, அவர்கள் அந்த முடிவைத் தாங்களாகவே எடுத்ததாக ஆய்வு குறிப்பிட்டது.

மேலும் குறைவானவர்களே அதாவது உள்ளூர் ஊழியர்களில் 1.7 விழுக்காட்டினர் மட்டுமே தகுதிக்கு ஏற்ற சிறந்த வேலையை விரும்பியும் அது கிடைக்காமல் உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

ஊழியரணி ஆய்வுத் தரவுகளையும் அனைத்துலக ஒப்பீடுகளையும் அடிப்படையாகக் கொண்ட மனிதவள அமைச்சு ஆய்வின்படி, அந்த விகிதம் கடந்த பத்து ஆண்டுகளில் 3 விழுக்காட்டுக்கும் குறைவாக, நிலையாக உள்ளது.

மேலும் கல்வித் தகுதியைவிடத் திறன்களுக்கும் அனுபவத்திற்கும் முதலாளிகள் முன்னுரிமை அளிக்கின்றனர். சிறப்புத் துறைகளில் மட்டும் இவை மாறுபடுகின்றன என்பதை ஆய்வு சுட்டியது,

கடந்த ஆண்டில் (2025), நிரப்பப்படாமல் இருந்த பணியிடங்களில் 79.6 விழுக்காட்டு இடங்களுக்குக் கல்வித் தகுதி முதன்மையான காரணமாகக் கருதப்படவில்லை. மாறாக, அப்பணி சார்ந்த அனுபவம், திறன், ஆற்றல் முதலியவற்றுக்கு முதலாளிகள் அதிக முன்னுரிமை அளித்தனர்.

“இது குறித்துக் கருத்துரைத்த ‘என்டியுசி’ உதவித் தலைமைச் செயலாளர் பேட்ரிக் டே, ‘‘ஊழியர்கள் பலர் அவர்களின் வாழ்க்கைக்கு ஏற்றவாறு நீக்குப்போக்குத்தன்மை, மனநிறைவு, தேவை ஆகியவற்றின் அடிப்படையில் விருப்பத்துடன் பணிசார்ந்த முடிவுகளை எடுக்கின்றனர். 

‘‘இது ஊழியர் சந்தையில் கட்டமைப்பு ரீதியான முரண்பாடுகள் இல்லை என்பதையும் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன என்பதையுமே காட்டுகிறது. துடிப்புமிக்க ஊழியர் சந்தை என்பது நீக்குப்போக்காக இருப்பதோடு பாதுகாப்பாக உள்ளதையும் உறுதிசெய்ய வேண்டும். இந்தப் பின்னணியில், சிங்கப்பூரில் தகுதிக்கேற்ற வேலை கிடைக்காத நிலை குறித்துத் தொடர்ந்து ஆய்வு செய்வது முக்கியம். இதன் மூலம்  இடைவெளிகள் எங்கு உள்ளன என்பதையும் பல்வேறு சூழல்களில்  ஊழியர்களின் தேவைகள் எவ்வாறு மாறுகின்றன என்பதையும்  மேலும் நன்றாகப் புரிந்துகொள்ள இயலும்,’’ என்றும் திரு பேட்ரிக் டே சொன்னார். 

குறிப்புச் சொற்கள்