ஒருவரது குடும்பத்தினர் அனுமதித்ததைவிட அதிகமான முறை சூதாட்டக் கூடத்துக்கு வருகை தரும் எவருக்கும் ஓர் ஆண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது உத்தேச புதிய குற்றத்தின் கீழ் $10,000 வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.
சூதாட்டக் கூடத்துக்கு ஒரு நபரின் வருகை எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, குடும்ப உறுப்பினர்களால் சூதாட்டக் கூட வருகை வரம்புகள் வகுக்கப்படுகின்றன.
இந்த வரம்புகளை மீறுவது தற்போது சட்டவிரோதமானது அல்ல. ஆனால் முன்மொழியப்பட்ட திருத்தப்பட்ட சட்டங்கள் நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் இந்நிலை மாறலாம்.
உள்துறை அமைச்சால் ஆகஸ்ட் 6ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சூதாட்டக் கட்டுப்பாடு (திருத்தம்) மசோதாவில் முன்மொழியப்பட்ட புதிய குற்றங்களில் இதுவும் ஒன்றாகும்.
2023ஆம் ஆண்டில் இரண்டு சூதாட்டக்கூடங்களில் 137 குற்றச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன. அந்த ஆண்டு சிங்கப்பூரில் நடந்த குற்றச் சம்பவங்களில் 0.2% மட்டுமே சூதாட்டக்கூடம் தொடர்பானவை. குறைவான குற்றங்கள் இப்பிரிவில் பதிவாகி உள்ளன.
சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் சூதாட்டத் துறையில் ஏற்படும் மாற்றங்களுடன் ஒத்திருப்பதை உறுதிசெய்வதற்கான வழக்கமான மறுபரிசீலனையின் ஒரு பகுதியாகும் என்று அமைச்சு விவரித்தது.
ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் பேச்சாளர், “கடந்த பத்தாண்டுகளில் குடும்ப வருகை வரம்புகளுக்கு ஆண்டுதோறும் மூன்று முதல் 14 விண்ணப்பங்கள் வந்துள்ளன,” என்றார்.
2010 முதல் 2023 வரை, ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஐந்து பேர் தங்கள் குடும்ப வருகை வரம்பை மீறியுள்ளனர் என்றும் சூதாட்டக் கூடங்களிலிருந்து விலக்கு உத்தரவின் கீழ் இருப்பவர்களும் கடுமையான சட்டங்களுக்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள் என்றும் அமைச்சு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
டிசம்பர் 2023 இறுதியில், 300,000க்கும் அதிகமான மக்கள், சூதாட்டக் கூடங்களுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டவர்களாக இருந்தார்கள் என்றும் சூதாட்டப் பிரச்சினை தொடர்பான தேசிய மன்றத்தால் (என்சிபிஜி) தரவு தெரிவிக்கிறது.
விளையாட்டின் முடிவு தெரிந்த பிறகு பந்தயத்தைத் திரும்பப் பெறுவதும் குற்றமாகும். தற்போது, முடிவு தெரிந்த பிறகு பந்தயம் கட்டுவது மட்டுமே குற்றமாகக் கருதப்பட்டது. ஆனால் திரும்பப் பெறுவது குற்றமாகக் கருதப்படுவதில்லை.
2010 முதல் 2023 வரை இந்தச் செயலுக்காக 10 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆனால் அவர்களைக் கையாள்வதற்கு காவல்துறையினர் வீட்டில் திருட்டு போன்ற பிற சட்டங்களைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.
தங்கள் விவரங்களைக் கொடுக்க மறுக்கும் அல்லது சூதாட்டக் கூடங்களுக்குள் நுழைய தங்கள் வயது குறித்த தவறான ஆதாரங்களைப் பயன்படுத்தும் வயது குறைந்தவர்கள், $10,000 வரையிலான அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஒப்புநோக்க, தற்போதைய அபராதம் $1,000 மட்டுமே.
21 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே சிங்கப்பூர் சூதாட்டக் கூடங்களுக்குள் நுழைய முடியும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், சுமார் இரண்டு முதல் நான்கு சிறார்கள் ஆண்டுதோறும் தவறான ஆதாரங்களைப் பயன்படுத்தி சூதாட்ட விடுதிக்குள் நுழைய முயன்றனர் என்று உள்துறை அமைச்சு கூறியது.

